புதுடெல்லி: மராட்டிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தால் மகாராஷ்டிராவில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இது மாநிலம் முழுவதிலும் தீவிரமாவதால், பீட் மாவட்டத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஷிவ்பா சங்கட்னா’ எனும் பெயரிலான மராட்டிய சமூக அமைப்பின் தலைவராக இருப்பவர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல்(41). இவர் கடந்த அக்டோபர் 25 முதல் அத்ராவலியின் சாரத்தேவில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி உள்ளார். இறக்கும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்ட இப்போராட்டம், மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நாளிலேயே மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியின் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
பீட் மாவட்டத் தொகுதியின் தேசியவாத காங்கிரஸின் எம்எல்ஏவான பிரகாஷ் சோலங்கியின் வீட்டின் முன் ஷிவ்பா சங்கட்னா அமைப்பினர் நேற்று கூடினர். அவரது குடியிருப்பின் வளாகத்தினுள் இருந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
சோலங்கியின் வீட்டின் உள்ளும் இந்த தீ பரவ அவரது குடும்பத்தினர் வெளியேறி உயிர் தப்பினர். பிறகு மசல்கான் நகரிலுள்ள அவரது அலுவலகம் மற்றும் அதை ஒட்டியிருந்த ஒரு உணவுவிடுதியும் தீயிடப்பட்டது. மேலும், மூன்று தாசில்தார்களின் வாகனங்களும் தீக்கிரையாகின. மற்றொரு கும்பல், அப்பகுதி கங்காபூர் பாஜக எம்எல்ஏவான பிரஷாந்தின் அலுவலகமும் சூறையாடப்பட்டது.
இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக அனுமதியின்றி ஆங்காங்கே ஊர்வலங்கள் நடத்த முயற்சிக்கப்பட்டன. இதில், பல அரசுப் போக்குவரத்து வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நாசிக்கின் ஹிங்கோலி தொகுதியின் சிவசேனா எம்.பி.,யான ஹேமந்த் பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இவரைப்போல், ஜியோராய் தொகுதி பாஜக எம்எல்ஏவான லக்ஷமன் பவாரும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இப்பட்டியலில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் மேலும் சில கட்சிகளின் பலர் தம் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தனது அமைச்சரவையின் துணைக் கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளார். அதில் எடுத்த முடிவின்படி, மராட்டிய சமூக ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு அளிக்கப்பட்ட நீதிபதி ஷிண்டே குழுவின் அறிக்கையை ஏற்பதாகவும் அறிவித்துள்ளார்.
மொத்தம் 11,350 குன்பி எனும் விவசாயப் பிரிவினரையும் மராட்டியர்களின் துணை சமூகத்தினர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குன்பிக்களுக்கும் ஒபிசியின் சான்றிதழ் அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவற்றை அமலாக்க மீண்டும் தன் அமைச்சரவையை கூட்டி உத்தரவிடுவதாகவும் முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இதற்குமுன் நடத்தப்பட்ட பல இட ஒதுக்கீடு போராட்டங்களில் இதுவரையும் 13 பேர் தற்கொலை செய்து பலியாகி உள்ளனர்.
இச்சூழலில், சிறிய அமைப்பான ஷிவ்பா சங்கட்னாவின் தலைவர் மனோஜ் பாட்டீல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது இரண்டாவது முறை ஆகும். விவசாயியான இவர், கடந்த ஆகஸ்ட் 29 இல் துவங்கிய போராட்டத்தின் நான்காவது நாளில் போலீஸாரின் தலையிட்டால் கலவரமானது.
பிறகு, முதல்வர் ஷிண்டே கேட்டுக் கொண்டதன் பேரில் முடிவுற்றது. தற்போது மீண்டும் துவங்கிய போராட்டக் களத்தில் நேற்று முதல்வர் ஷிண்டே, மனோஜிடம் சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தார்.
சிறிது அவகாசம் தேவை எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டதால், நேற்று மனோஜ் சிறிது குடிநீர் அருந்தினார். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் 12 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 55 பேர் கைது செய்யப்பட்டு மேலும், அடையாளம் தெரியாத சுமார் 300 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இப்பிரச்சினையை மகாராஷ்டிராவின் எதிர்கட்சிகள் நேரடியாக களம் இறங்கவில்லை.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (யுபிடி)யின் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்ட பலரும் போராட்டக்காரரான மனோஜை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதனால் தீவிரமாகும் போராட்டத்தால் மகாராஷ்டிரா அரசியல், புதிய உருவம் எடுக்கத் துவங்கி உள்ளது.