`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்'… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்!

வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பை கனடா நாட்டின் கவிஞர் ரூபி கவுர் (Rupi Kaur) நிராகரித்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து தற்போது கனடாவின் டொரொன்டோவில் வசித்து வரும் ரூபி கவுர், 2014-ல் வெளியிடப்பட்ட தனது முதல் புத்தகமான `மில்க் அண்ட் ஹனி’ மூலம் பிரபலமடைந்தார். மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்த இந்தப் புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இருந்தது. 

காதல், இழப்பு, அதிர்ச்சி, ஹீலிங், பெண்ணியம் போன்று பல தீம்களில் எழுதி வரும் கவுர், தனது `தி சன் அண்ட் ஹர் ஃப்ளவர்ஸ்’ என்ற இரண்டாவது புத்தகத்தை 2017-ல் வெளியிட்டார்.  

ரூபி கவுர்

இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார். மாதவிடாய் காலத்தில் ரத்தக் கறையுடன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் இவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் அதன் பக்கத்தில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பெருமளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

பெண்களின் பாலியல் புகைப்படங்களை அனுமதிக்கும் ஒரு தளம், இயல்பாகப் பெண்களுக்கு நடக்கும் அனுபவங்களை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து காட்டமாக விமர்சித்து இருந்தார்.

தீபாவளி கொண்டாட்டத்திற்கான வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்தது ஏன்?!…

நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பு ரூபி கவுருக்கு வந்திருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து இருக்கிறார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அமெரிக்க அரசாங்கம் நியாயப்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 8-ம் தேதி துணை அதிபர் நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிக்கு பைடன் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

குடிமக்கள் சிக்கிய நிலையில் அவர்களுக்குக் கூட்டுத் தண்டனை வழங்குவதை ஆதரிக்கும் நிறுவனத்திடம் இருந்து எந்த அழைப்பையும் நான் நிராகரிக்கிறேன். அவர்களில் 50 சதவிகிதத்தினர் குழந்தைகள். 

காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 100 பேர் பலி!

இன்று, அமெரிக்க அரசாங்கம் காஸா மீதான குண்டுவீச்சுக்கு நிதியளிப்பது மட்டுமல்லாமல், எத்தனை அகதிகள் முகாம்கள், சுகாதார வசதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டாலும் சரி, அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை, மருத்துவர்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பெரும்பாலான நாடுகளின் மனிதாபிமான போர் நிறுத்த அடிப்படை நடவடிக்கைக்கான அழைப்பை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 70 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள். `இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று மனித உரிமைகளுக்காகப் போராடும் அம்நெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து நியாயப்படுத்துவதாகவும், போர் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உதவி வருவதால் இந்த அழைப்பை நிராகரித்து இருக்கிறார். 

இவரின் புறக்கணிப்பைக் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ பட நடிகை, ரிச்சா மூர்ஜானி வெள்ளை மாளிகை கொண்டாட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளார்.    

போருக்கு எதிரான உங்களது குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.