`பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்'- அமெரிக்க ஜிம்மில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய இளைஞர் மரணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள உடற்பயிற்சி மையம் (Gym) ஒன்றில், தலையில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயதான இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்டவராக அறியப்படும் இந்திய இளைஞர் வருண் ராஜ் புச்சோ, தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவின் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்திருக்கிறார். இவர் நாள்தோறும் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று உடற்பயிற்சிகளை‌ மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி மையத்துக்குச் சென்ற வருணை, ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவர் அவரின் தலையில் கத்தியால் குத்தியிருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த வருண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (புதன்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஜோர்டான் ஆண்ட்ரேட் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது, கொடிய ஆயுதத்தால் ஆபத்து விளைவித்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வருண் மிகவும் அமைதியான மாணவர் என்றும் இவர்கள் இருவரும் இதற்கு முன்பு பேசியதில்லை என்றும் தெரியவந்தது.

கொல்லப்பட்ட இந்திய இளைஞர் வருண் ராஜ் புச்சோ

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த ஜோர்டான் ஆண்ட்ரேட், “உடற்பயிற்சி மையத்தின் மசாஜ் அறைக்குள் நுழைந்தபோது அங்கு வருண் இருந்தான். அவன், பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை அவன் தள்ளிவிட முயன்றான். அதனால் என்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவன் தலையில் கத்தியால் குத்தினேன்” எனத் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், உடற்பயிற்சி மையத்தில் அவர்கள் இருவரும் என்ன உரையாடினர், இந்தக் கொலைக்குப் பின்னால் வெறும் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இன்னொருபக்கம், வருணின் குடும்பத்துக்கு உதவுவதற்காக, வட அமெரிக்க தெலுங்கு சங்கம் ‘GoFundMe’ மூலம் 90,000 டாலர் நிதி திரட்டியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.