மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது: தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது” என்று கருத்து தெரிவித்துள்ளது.

மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 6-ஆம் தேதி தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன்படி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனு நவம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “மசோதாக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைக்கிறார். பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார்; கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளைக் கூட கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்” என தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது.

அதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், ‘மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்’ என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 20-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வாத – விவாதத்தின் விவரம்: இன்றைய விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஏ.எம்.சிங்வி, பி.வில்சன் ஆகியோர், “ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரும் கோப்பு, டிஎன்பிஎஸ்சி நியமனங்கள், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒப்புதல் கோரும் கோப்புகளைக் கூட ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளா” என்று தெரிவித்தனர். வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், “மக்களின் பொது சுகாதாரம் தொடங்கி உயர் கல்வி விவகாரம் வரை எந்தக் கோப்புகளுக்கும், மசோதாக்களுக்கும் ஆளுநர் பதில் அளிக்கவில்லை” என்றார். அப்போது உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன் படி மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டி காட்டியது.

இதனை இன்னும் விவரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்றார். அப்போது வழக்கறிஞர் சிங்வி, “அதையே நாங்களும் கூறி வருகிறோம். மசோதாக்கள் மீது முடிவெடுக்கும்படி நாங்கள் 2020 ஜனவரி தொடங்கி இப்போது வரை ஆளுநரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக சில கோப்புகளில் கையெழுத்திட வேண்டி வருகிறோம். சில கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் குறைப்புக்கு பரிந்துரைக்க வேண்டி வருகிறோம். ஆனால், அவர் எதையுமே செய்வதில்லை” என்றார்.

அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் வில்சனும் வாதிட்டார். அப்போது அவர், “ஆளுநர் செயல்படாமல் இருப்பதால் டிஎன்பிஎஸ்சியில் 14 இடங்களில் தலைவர் உள்பட 10 பதவிகள் காலியாக உள்ளன. எத்தனையோ முறை கோரியும் ஆளுநர் அந்தக் கோப்பை இதுவரை கிடப்பில் போட்டிருக்கிறார்” என்று கவலை தெரிவித்தார். இவ்வாறு நீதிமன்றத்தில் இன்று வாதிடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதேபோல், ‘தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.