டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டதால் ஒற்றை – இரட்டை இலக்க திட்டம் ஒத்திவைப்பு: மாநில அரசு

புதுடெல்லி: காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால், டெல்லியில் ஒற்றை- இரட்டை இலக்கத் திட்டத்தை (The odd-even scheme) செயல்படுத்துவதை ஒத்திவைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். காற்றுமாசு தீவிரமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் வாகனங்களில் ஒற்றை – இரட்டை இலக்க திட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த முடிவை நீட்டிப்பது குறித்தும் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று பெய்த மழையின் காரணமாக, காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் ஒற்றை – இரட்டை இலக்கத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைப்பதாக டெல்லி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே ஒற்றை – இரட்டை இலக்கத் திட்ட விதிகளுக்கு உட்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் டாக்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது, தனியார் (only privately-owned) வாகனங்களை அவற்றின் பதிவு எண்களின் அடிப்படையில் `ஒற்றை – இரட்டை’ இலக்க முறையில் வகைப்படுத்துகிறது. அதன்படி, ஒற்றை இலக்கத்தில் அடங்கும் வாகனங்கள் குறிப்பிட்ட நாள்களிலும், இரட்டை இலக்கத்தில் அடங்கும் வாகனங்கள் குறிப்பிட்ட நாள்களிலும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. வாகன மாசுபாட்டை (vehicular pollution) கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒற்றை – இரட்டைத் திட்டம் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.