ஈரோடு: “தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி பிரச்சினையைப் பொறுத்துவரை எப்படி நமக்கு வயிற்றுப் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவுக்கும் உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆணையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் விருப்பம் போல், ஏதேதோ செய்கிறார். கடந்த 4 நாட்களில் அவரிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டது விவசாயிகள் தானா என்ற சந்தேகம் உள்ளது. அங்கு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மீது தான் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது. அதில் சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவற்றை நீக்கியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும். ஐந்து மாநில தேர்தலில், பஞ்ச பாண்டவர்கள் போல் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று அவர் தெரிவித்தார்.