பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவது, அரசுக்கே திருப்பியனுப்புவது, தெலங்கானாவில் கடந்த ஆண்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை இல்லாமலேயே பட்ஜெட் கட்டத்தொடர் தொடங்கியது, பஞ்சாப்பில் மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற நிகழ்வுகளைக் கூறலாம்.
இதில், தமிழ்நாடு அரசும் பஞ்சாப் அரசும் ஆளுநருக்கெதிராக தாக்கல்செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. உச்ச நீதிமன்றமும் ஆளுநர்கள் தலையில் கொட்டு வைக்கும் விதமாக, ஆளுநர் பதவியின் அதிகாரம் குறித்த கருத்துகளைக் கூறிவருகிறது. இந்த நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் அலுவலகத்துக்கு எந்த காலக்கெடுவும் விதிக்கக் கூடாது என அம்பேத்கரே பரிந்துரைத்ததாகவும், அவ்வாறு காலக்கெடு இருந்தால் ஆளுநர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகமொன்றில், ஆளுநர் பதவி, அதிகாரம், மசோதா விவகாரம் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “ஆளுநர் பதவி ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். ஆனால், அதுவே தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. முதலமைச்சர்களைக் காட்டிலும் ஆளுநர்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதேசமயம், ஆளுநர் என்பவர் பொதுமக்களுடன் ஈடுபடாமல் ராஜ்பவனில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறதென்றால் அது இறந்துவிட்டது என்று அர்த்தமல்ல, அது பரிசீலனையில்தான் இருக்கிறது.
மேலும், முழுமையான பரிசீலனையை அனுமதிக்கும் வகையில், டாக்டர் அம்பேத்கரே ஆளுநர் அலுவலகத்துக்கு எந்த காலக்கெடுவும் விதிக்கப்படக் கூடாது என்று பரிந்துரைத்தார். அதுமட்டுமல்லாமல், ஒரு காலக்கெடு இருந்தால், ஆளுநர்கள் அதைப் பின்பற்றுவார்கள். காலக்கெடு இல்லாததால்தான் ஆளுநர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. இன்னொருபக்கம், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய நீங்கள் யார்… நீங்கள் ஏன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள்… என்று முதலமைச்சர்கள் கூறுகின்றனர். எனவே, முதலமைச்சர்களும் ஆளுநர்களும் ஒருவரையொருவர் தார்மீகமாக அணுக வேண்டும்” என்று கூறினார்.
இருப்பினும், தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.