புதுடெல்லி: துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎப்) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘சரக்குகளை ஏற்றிக் கொண்டுஇந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ள தற்கு இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘‘இது, ஈரானியபயங்கரவாதத்தின் மற்றொரு செயல். சர்வதேச கப்பல் மீதுஈரான் நடத்திய இந்த தாக்குதலை இஸ்ரேல் வன்மையாக கண்டிக்கிறது. உலகளாவிய கப்பல்பாதைகளின் பாதுகாப்பை இந்த சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது’’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி லீடர் என்ற அந்த சரக்கு கப்பல் துருக்கியின் கோர்பெஸ் நகரில் இருந்து வாகனங்களை ஏற்றிக் கொண்டு குஜராத்தின் பிபாவாவ் நகருக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, செங்கடல் பகுதியில் வைத்து அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையேயான மோதலில் ஹமாஸ் தீவிரவாதி களுக்கு ஈரான் ஆதரவு படையான ஹவுதி ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹவுதி அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யாசாரியா, “இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இஸ்ரேல் கொடியுடன் செங்கடல் பகுதியில் வலம் வரும் கப்பல்கள் அனைத்தும் குறிவைக்கப்படும்’’ என்று ஏற்கெனவே தெரிவித் திருந்தார். இந்நிலையில் இந்த கப்பல் கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடத்தப்பட்ட கேலக்ஸி லீடர் சரக்கு கப்பல் இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருந்தாலும், அதில் இஸ்ரேலிய தொழிலதிபர் ஆபிரகாம் ராமி உங்கருக்கும் பங்கு இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் அந்தக் கப்பலில் உக்ரைன், பல்கேரியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.