புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்த பிறகு 10 மசோதாக்களையும் தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன் என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைத்த மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம்செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதுபோல, கேரளா, பஞ்சாப் ஆளுநர்களுக்கு எதிராகவும் அந்தந்த மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்அமர்வில் இந்த வழக்குகள் நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்:
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், முகுல் ரோஹ்தகி: இந்த வழக்கில், தமிழகஆளுநரின் செயல்பாடு கவலை அளிக்கிறது என உச்ச நீதிமன்றம்தெரிவித்த பிறகே, 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு அவர் திருப்பிஅனுப்பியுள்ளார். அந்த 10 மசோதாக்களும் கடந்த 18-ம் தேதி மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே 5 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். ‘கூடிய விரைவில்’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஆளுநர் காலவரையின்றி இவ்வாறு மசோதாக்கள், கோப்புகளை தேக்கி வைக்க அனுமதித்தால் மாநிலங்களில் நிர்வாகம் முடங்கும்.
நீதிபதிகள் (ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணியிடம்): இந்த வழக்கில் எங்கள் கருத்தை தெரிவித்து கடந்த10-ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்தோம். அதன்பிறகு 13-ம் தேதி ஆளுநர்10 மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக அரசு இந்த மசோதாக்களை கடந்த2020-ல் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அப்படியென்றால், இந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார். மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஆளுநர்கள் எதற்காக காத்திருக்க வேண்டும்.
அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா: கடந்த 2020 முதல் இதுவரை பெறப்பட்ட 181 சட்ட மசோதாக்கள், அரசாணைகள் உள்ளிட்ட கோப்புகளில் 152-க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நீதிபதிகள்: ஆளுநர் குறிப்பிட்ட ஒருசில மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பது பிரச்சினை அல்ல. பொத்தாம் பொதுவாக ஏன் அனைத்துமசோதாக்களையும் தேக்கி வைக்கிறார் என்பதே கேள்வி. பேரவையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அவற்றை பண மசோதா போலத்தான் கருத வேண்டும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமலும், மீண்டும் பேரவைக்கு அனுப்பாமலும் இருக்க முடியுமா. கடந்த 18-ம் தேதி 10 மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
மத்திய அரசு தரப்பு: நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகள் மீதுஆளுநர் முடிவெடுக்க சற்று அவகாசம் வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் டிச.1-க்கு தள்ளிவைத்தனர்.
181 மசோதா, கோப்புகளில் 152-க்கு ஒப்புதல்: ஆளுநர் 35 பக்க அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 35 பக்க அறிக்கையை அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆர்.என்.ரவி கடந்த 2021-ல் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் வெறும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் அல்ல. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் வேந்தர் என்ற ஆளுநரின் உரிமையை பறித்து முதல்வரிடம் கொடுப்பதுபோல மசோதா இருந்ததால், அவற்றை மறுஆய்வு செய்யவே திருப்பி அனுப்பினார். குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2020 முதல் இதுவரை பெறப்பட்ட 181 சட்ட மசோதாக்கள், அரசாணைகள் உள்ளிட்ட கோப்புகளில் 152-க்கு ஒப்புதல் அளித்துள்ளார். 5 மசோதாக்களை அரசே வாபஸ் பெற்றது.9 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். 5 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான கோப்பு பரிசீலனையில் உள்ளது.
580 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கோரும் கோப்பில் 362 பேரை விடுவிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.165 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 53 பேரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.
டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கும் அரசின் பரிந்துரையில் வெளிப்படைத்தன்மை இல்லை. துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழு நியமனத்தில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவி்ல்லை என்பதால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.