சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான வீடியோஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான்,நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம்.
இதுபோன்ற கருத்துகள்பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’ என்று பதிவிட்டுள்ளது.