- இளைஞர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்ற அவையில் நடைபெற்றது.
“இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கான இளைஞர்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்” என்பதே இவ்வருட அமர்வின் தொனிப்பொருளாகும்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் முதல்நாள் அமர்வில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இளைஞர் பாராளுமன்ற சபாநாயகருடன் இணைந்து படைக்கள சேவிதர் செங்கோலை எடுத்து சபைக்குள் பிரவேசித்த பின்னர் இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரதமர் பெதும் ரணசிங்க, அமர்வை ஆரம்பித்து வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த அமர்வில் இளைஞர் பாராளுமன்ற சட்டம், அரசியல் அகாடமி மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் பங்கு மற்றும் இளைஞர் பாராளுமன்றத்தை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான இளைஞர் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதமும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க, பிரபல்யமான தீர்மானங்களை எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைந்த யுகத்திற்கு கொண்டு செல்லும் அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்று தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கும் இன்றைய நிலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான தலைமைத்துவத்திற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். தற்போது ஸ்திரமாக உள்ள நாட்டின் பொருளாதாரத்தை முழு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதே இந்த ஆண்டு பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாகும்.இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பாரிய அர்ப்பணிப்பை வழங்கினார்கள்.
மேலும், 2024ஆம் ஆண்டை பொருளாதார வளர்ச்சி ஆண்டாக மாற்றுவது இந்த ஆண்டு பட்ஜெட்டின் மற்றொரு இலக்காகும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புகளை செய்தனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டை திரும்பிப் பார்த்தால், அந்த கசப்பான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்கள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படுவதை யாரும் பார்க்க விரும்பவில்லை. எனவே, நெருக்கடி நிலை மற்றும் நெருக்கடிக்கு காரணமான காரணங்கள் குறித்து சரியான புரிதலுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த உறுதியுடன் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். அவரின் தலைமைத்துவத்துக்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். அவர் எவ்வளவுதான் உறுதியுடன் இருந்தாலும், அந்த உறுதியின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், 15 மாதங்களுக்கு முன்பு இருந்த நாட்டிற்கும் இன்று நாம் அனுபவிக்கும் நாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியாது. எனவே, ஜனாதிபதி முதல் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஜனாதிபதி அலுவலகம், பல்வேறு முக்கிய அமைச்சுகள் மற்றும் இந்நாட்டு மக்களும் கைகோர்த்து பெற்றுக் கொண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை இன்று அனுபவித்து வருகின்றனர்.இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. இன்று இருக்கும் நிலைக்கு வருவதற்கு மிகவும் வேதனையான காலகட்டத்தை நாம் கடந்தோம்.
இந்த வகையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த முதல் நாடு இலங்கை மட்டுமல்ல. ஆனால் குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சரியான பாதையில் பயணித்த நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது என்பது அரசியல் கோணத்தில் பார்க்க
வேண்டிய ஒரு விடயமல்ல. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பிரபலமான தீர்மானங்களை
எடுக்கவில்லை. அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையக் கூடிய தீர்மானங்களை எடுத்திருந்தால், இந்த நாட்டின் நிலைமை 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
இந்த வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பு எமக்குத் தேவை. முதலில், பிரதேச அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களான உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்குங்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைபேறான முன்மொழிவை வழங்க முடிந்தால், திருத்தங்களைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வரவு செலவுத்திட்டத்தில் உள்ள நல்ல விடயங்கள், மேலும் முன்னேற்றம் தேவைப்படும் விடயங்களை குறித்து கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவரினதும் கருத்துகளுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக தரவு மற்றும் எண்களின் அடிப்படையில் உரிய பாராட்டுகளைப் பெறக்கூடிய முடிவுகளை எடுக்கும் கொள்கையை ஜனாதிபதியும் அரசாங்கமும் தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கிணங்க உலகின் சிறந்த நடைமுறைகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர் விவகார மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கான ஜனாதிபதி பணிப்பாளர்களான ரந்துல அபேதீர, சதிர சரத்சந்திர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.