நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான், ‘லியோ படத்தில் த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. ரேப் சீன்களெல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை’ என்று பேசியிருந்தது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த நடிகை த்ரிஷா, “மன்சூர் அலிகான் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் பேச்சில் அவமரியாதை, பெண் வெறுப்பு, ஆபாசம் இருப்பதாக நான் உணர்கிறேன். இவரைப் போன்ற சிலரால் மனிதகுலத்துக்கே இழிவு ஏற்படுகிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சைக் கண்டித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சின்மயி, குஷ்பூ உள்ளிட்ட பல திரைபிரலங்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து மன்சூர் அலிகானும், “நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சனை இருக்கு… பொழப்ப பாருங்கப்பா…. நன்றி!” என்று விளக்கமளித்திருந்தார்.
இருப்பினும், மன்சூர் அலிகான் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க பெண்களுக்கு எதிரான பேச்சு என்று பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். நேற்று தேசிய மகளிர் ஆணையமும் மன்சூர் அலிகான் மீது IPC பிரிவு 509 B மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிரஞ்சீவி, மன்சூர் அலிகானின் பேச்சிற்குக் கடுமையான கண்டங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நடிகை த்ரிஷா பற்றிய மன்சூர் அலிகானின் கண்டிக்கத்தப் பேச்சைக் கேட்டேன். இதுபோன்ற கீழ்தரமான, அருவருக்கத்தக்க பேச்சுகள் நடிகைக்கு மட்டுமின்றி எந்தவொருப் பெண்ணுக்கும் வரக்கூடாது. இதுபோன்ற பேச்சுகளைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இவை பெண்களைத் துவண்டுபோகச் செய்துவிடும். இந்த விஷயத்தில் நான் த்ரிஷாவிற்கு மட்டுமல்ல இதுபோன்ற பேச்சுக்களால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கும் ஆதவரவாக நிற்பேன்” என்று தனது கண்டங்களைத் தெரிவித்துள்ளார்.