சினிமாவில் 20வது ஆண்டைக் கொண்டாடுகிறார் நயன்தாரா. 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் `அன்னபூரணி’ அவரது 75வது படமாகும். `மாயா’, `அறம்’, `கனெக்ட்’ உட்படப் பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் ஸ்கோர் செய்த நயன்தாரா, இப்போது கதாநாயகிக்கான கதைகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறார்.
திருமணத்திற்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் நயன்தாரா. அவரது 20 வருடத் திரைப்பயணத்தில் இப்போது 75 படங்களைத் தாண்டிவிட்டார். அவரது 75வது படமான ‘அன்னபூரணி’யை ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெய், சச்சு, ரேணுகா எனப் பலரும் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கிடையே மாதவன், சித்தார்த் நடிக்கும் சஷிகாந்தின் ‘டெஸ்ட்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ கூட்டணியான யோகி பாபுவுடன் இதில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் பண்ணுகிறார் நயன். ‘நெஞ்சுக்கு நீதி’, ‘கனா’ படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அதை இயக்குகிறார். இதுவும் ஹீரோயின் சென்ட்ரிக் கதையாகும்.
இதனை அடுத்து ‘கொடி’, ‘பட்டாஸ்’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரின் இயக்கத்திலும் நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் சென்ட்ரிக். நயனின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடக்கிறது. துரை செந்தில்குமார் இப்போது சூரியை வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கி வருகிறார்.
பாலிவுட் படமான `ஜவான்’ வெற்றியினால் இந்தியிலிருந்தும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட் விஷயத்தில் பொறுமையாகப் படங்களைத் தேர்வு செய்யுங்கள் என அட்லி அறிவுறுத்தியிருப்பதால், தற்போது அங்கே கதைகள் மட்டும் கேட்டு வருகிறார்.