சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம்
கோவாவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி நடித்த மவுனபடமான 'காந்தி டாக்ஸ்' திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவருடன் அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்ட படம் இது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் மவுன படம் என்ற பெருமையை 'காந்தி டாக்ஸ்' பெற்றுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கிஷோர் கூறியதாவது: இந்தத் திரைப்படம் டார்க் காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு கதாபாத்திரம் தனது நிதித் தேவைகளைக் கையாளும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பணத்தேவை மற்றவர்களின் வாழ்க்கையில் எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் விவரிக்கிறது. ஒரு வேலையில்லா பட்டதாரி, தனக்கான வேலையை சாத்தியமாக்க போராடும் போது அவன் வாழ்வில் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு திருடனைக் கடக்கிறான். அப்போது அவன் வாழ்க்கையில் எப்படியான திருப்பம் ஏற்படுகிறது என்பதையும் கதை விவரிக்கிறது.
'காந்தி டாக்ஸ்' படம் உரையாடல் இல்லாமல் காட்சிகள் மூலம் கதை சொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மவுனப் படம் எடுப்பது சாதாரணமானது அல்ல. இது ஒரு கதை சொல்லும் வடிவம். உரையாடல் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது பயமாக மட்டுமல்ல, சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருந்தது. மேலும், இந்த சவால்கள் எழுத்து, படமாக்கல், மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிலும் இருந்தது. என்றார்.