டெல் அவிவ்,
இஸ்ரேலில் புலம்பெயர்ந்து சென்ற குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் உன்னத பணியில் ஆலன் சகோவிஜ் என்பவர் ஈடுபட்டு உள்ளார்.
இதற்காக அவர், இப்ராத், கிர்யாத் கத், பெய்ட் ஷீமேஷ், ஜெருசலேம் மற்றும் பெய்தர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அக்டோபர் 26-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரையிலான 9 நாட்களில் அதிரடி சுற்றுப்பயணம் செய்து, 26 மேஜிக் ஷோக்களை நடத்தியிருக்கிறார்.
இதில், இப்ராத் பகுதியில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 10,800 பேரில் 960 பேர் வரை இதனை கண்டு களித்துள்ளனர். இது ஏறக்குறைய 9 சதவீதம் ஆகும் என அவர் கூறுகிறார்.
இதுபற்றி சகோவிஜ் கூறும்போது, நிறைய குழந்தைகள் மற்றும் நம்முடைய வீரம் நிறைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் ஆகியோரை சந்தித்தது வாழ்நாள் அனுபவம். நம்முடைய நாயகர்கள், அவர்களுடைய பெற்றோர் மற்றும் வீரர்களின் மனைவிகள் ஆகியோருக்காக, நாம் எப்படி பெருமை கொள்கிறோம் என்று அவர்களிடம் தெரிவித்தோம் என்று அவர் கூறினார்.
அவருடைய தந்திர காட்சிகளை பார்வையாளர்கள் பலரும் ரசித்து, மகிழ்ந்தனர். அப்போது அவர்களின் எண்ண ஓட்டங்களை பார்க்க முடிந்தது என்று அவர் கூறுகிறார். தொடர்ச்சியாக மேஜிக்கில், நான் சரியான விசயங்களை செய்தபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
குழந்தைகளில் பலர் ஹீப்ரூ பேசினர். நான் ஆங்கிலம் மட்டுமே பேசினேன். ஆனாலும், அவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் என்னை கட்டி பிடித்தனர். என்னுடைய செய்தியை புரிந்து கொண்டனர் என எனக்கு தெரியும். என்னுடைய மேஜிக்கை விட அவர்களுக்கு நான் கூறிய செய்தியை அவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் பெற்றோர் ராணுவத்தில் உள்ளனர் என தெரிய வந்ததும், நான் கண்ணீரை எதிர்த்து போராட வேண்டியிருந்தது என்று சகோவிஜ் கூறியுள்ளார்.
அந்த குழந்தைகளிடம் அவர், உங்களுடைய தந்தையோ அல்லது தாயோ உலகை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் என்னுடைய ஹீரோக்கள் என கூறியுள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு வேண்டிய பொருட்களையும் அவர் வழங்கினார்.