சென்னை,
உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் தோல்வியடைந்த இந்திய அணியை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது