ஜெய்ப்பூர்: “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் ‘எக்ஸ்-ரே’ போன்றது. அந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் அவசியம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் வல்லப்நகரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் ‘எக்ஸ்-ரே’ போன்றது. அந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். மேலும் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும். பிரதமர் மோடி தன்னை ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிப் பேசும்போது மட்டும், இந்தியாவில் ஒரேஒரு சாதிதான் இருக்கிறது. அதுவும் ஏழைகள் என்ற சாதி என்கிறார்.
நாட்டில் ஏழைகள் என்ற சாதி மட்டும் கிடையாது, கோடீஸ்வரர்கள் என்ற மற்றொரு சாதியும் இருக்கிறது. அதில் அதானி, அம்பானி ஆகியோர் அடங்குவார்கள். அவர்களுக்கு மட்டும் தனி சாதி இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதானி பிக்பாக்கெட் அடிக்கும்போதெல்லாம், மக்களின் கவனத்தை திசை திருப்புவதே மோடியின் வேலை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.