வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா

இணையதளங்கள், டிவிக்கள், சமூக வலைத்தளங்கள், யு டியூப் சேனல்கள் என கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக 'பருத்தி வீரன்' படம் பற்றிய பரபரப்பான விஷயங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தது.

'மாயவலை' பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'கார்த்தி 25' விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என இயக்குனர் அமீர் பேசியிருந்தார். அடுத்த சில நாட்களில் அமீர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்து அவரை 'திருடன்' என்று சொல்வது வரை பேட்டி அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

ஞானவேல்ராஜா பேசிய எதுவுமே அவருக்கு சாதகமாக அமையவில்லை. அவரது பேட்டி குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக விமர்சித்து, சசிகுமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். சிவகுமார் குடும்பத்தினர் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்களை நோக்கி விமர்சனங்கள் பாய்ந்தன.

இந்நிலையில் சற்று முன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஞானவேல்ராஜா. ‛‛ 'பருத்தி வீரன்' பிரச்னை 17 ஆண்டுகளாக நடக்கிறது. இது நாள் வரை நான் அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்று தான் குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது அதில், நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்,'' என தெரிவித்துள்ளார்.

இனிமேல் இந்த 'பருத்தி வீரன்' விவகாரம் குறித்து நீதிமன்ற வழக்கு தவிர வேறு எந்த பஞ்சாயத்துகளும் வராது என நம்புவோம்.

தான் ஆரம்பித்து வைத்த சர்ச்சையை தானே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் ஞானவேல் ராஜா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.