சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
சென்னையில் தொடர் கனமழை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கிண்டி,தி.நகர், மீனம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்: கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளான, புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
5 இடங்களில் 10 செ.மீ. மழைப்பதிவு: சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 4 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், 6.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 5 இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையின் மீது மேககுவியல்கள் அதிகமாக காணப்படுவதால், இன்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சுரங்கப் பாதைகள் மூடல்: கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகமான நீர்தேங்கிய காரணத்தால், பெரம்பூர் ஹைவே சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதைகள் மூட்டப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னையில் புதன்கிழமை தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், நாளை (நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையின் காரணமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவை பாதிப்பு: கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக சிக்னல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.