மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பா.ஜ.க-வால், 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், நாடு முழுவதும் இதற்கெதிராக நடைபெற்ற போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், சட்டத்துக்கான விதிகளை வகுப்பதில் சிக்கல் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இதற்கெதிராகத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்திலும், இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், இதை எப்படியாவது நிறைவேற்றுவது என மத்திய பா.ஜ.க அரசு குறியாக இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்புகூட, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், `குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாகக் கூறியிருக்கிறார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய அமித் ஷா, “மேற்கு வங்கத்தில் ஊடுருவும் நபர்களுக்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவை வெளிப்படையாகவும், சட்டவிரோதமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. இவ்வளவு ஊடுருவல் நிகழும் மாநிலத்தில், எப்படி வளர்ச்சி இருக்கும்… அதனால்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் நம் நாட்டின் சட்டம். நாங்கள் அதை அமல்படுத்துவோம். யாராலும் அதைத் தடுக்க முடியாது” என்று கூறினார்.