புதுடில்லி:கட்டிட விதிமுறைகளை மீறி சொத்துகளைப் பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை, டில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் திரும்ப பெற்றது.
இதுகுறித்து, டில்லி கவர்னர் மாளிகை அதிகாரி கூறியதாவது:
‘ரெரா’ எனப்படும் டில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்தனர்.
அப்போது, கட்டட விதிமுறைகளை மீறி, சொத்துக்களைப் பதிவு செய்யக்கூடாது என கடந்த செப்டம்பர் மாதம் ஆணையம் பிறப்பித்த உத்தரவால், டில்லியில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து, அதிகாரிகளிடன் கவர்னர் எடுத்துரைத்தார். மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறும் கூறினார். இந்தச் சந்திப்புக்குப் பின், டில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலர் வெளியிட்ட உத்தரவில், ‘கவர்னரின் ஆலோசனை பரிசீலனை செய்யப்பட்டது. நடுத்தர மக்களின் சிரமங்களைத் தீர்க்கும் வகையில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்ப பெற ஆணையம் முடிவு செய்துள்ளது’என, கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆணையம், துணைப் பதிவாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் கட்டப்பட்ட கூடுதல் குடியிருப்புகளை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது. மேலும், செப்டம்பர் 15, 2023க்குப் பின் அனுமதிக்கப்பட்ட அனைத்து கட்டட திட்டங்களும், திட்டத்தில் தனித்தனியாகக் குறிக்கப்பட்ட ஒரு ப்ளாட்டில் கட்டப்படக்கூடிய மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
ரெராவின் இந்த உத்தரவால் துணைப் பதிவாளர்கள் சொத்துக்களைப் பதிவு செய்வதை நிறுத்தினர். இதையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து கவர்னருக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, “ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை திரும்பப் பெறுவதன் வாயிலாக, டில்லி மக்களின் கோரிக்கையை கவர்னர் நிறைவேற்றியுள்ளார்,”என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement