புதுடில்லி :புதுடில்லி தலைமைச் செயலர் நரேஷ் குமார் பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலர் நரேஷ் குமாரின் பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலரின் பணிக் காலத்தை நீட்டிப்பது அல்லது புதிய தலைமைச் செயலரை நியமிக்கும்போது தங்களுடன் ஆலோசனை நடத்த உத்தரவிடக் கோரி புதுடில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஐந்து அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசு தயாரித்து அதில் ஒருவரை புதுடில்லி அரசு தேர்ந்தெடுக்கலாம் என சமீபத்தில் கூறியிருந்தது.
இதற்கிடையே தலைமைச் செயலரின் பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
புதுடில்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து புதுடில்லி அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது.
அதே நேரத்தில் பணி நீட்டிப்பு வழங்கும் இந்த உத்தரவு சட்ட விதிகளை மீறியதாக இல்லை. அதனால் பணி நீட்டிப்பு உத்தரவு செல்லும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement