புதுடெல்லி: உத்தரப்பிரதேசக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் நடத்திய ‘கேட்வாக்’ சர்ச்சையாகி உள்ளது. இந்த ஆடை அலங்கார அணிவகுப்புக்கு முஸ்லிம் மவுலானாக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உபியின் மேற்குப்பகுதியான முசாபர்நகரில் ஸ்ரீராம் கல்லூரி உள்ளது. இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மாணவிகளும் படித்து வருகின்றனர்.இவர்களில் முஸ்லிம் மாணவிகள் தங்கள் ஆடை மற்றும் கூந்தல் வெளியில் தெரியாதபடி பலரும் பர்தா எனும் புர்கா அணிந்து கல்லூரிக்கு வருபவர்கள். மேலும், இவர்கள் பொதுவாக கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது உண்டு.
இதுபோன்ற மாணவிகளையும் பங்கேற்க வைக்கும் முயற்சி முசாபர்நகரின் ஸ்ரீராம் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இங்கு ’ஸ்பலாஷ் 23’ எனும் பெயரில் நடைபெற்ற கல்லூரி விழாவில் முஸ்லிம் மாணவிகளுக்காக புர்காவுடன் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தி இருந்தனர்.இதில், சுமார் 25 மாணவிகள் புர்கா அணிந்து தங்களது கல்லூரியின் மேடையில் கேட்வாக் நடத்தினர். பின்னணி இசையுடன் அணிவகுப்பில் கலந்துகொண்ட மாணவிகள் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.அத்துடன், முஸ்லிம்களின் முறைப்படி பார்வையாளர்களுக்கு சலாமும் செய்தனர். மிகவும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர்களது ஆடை அலங்கார அணிவகுப்புக்கு உ.பி.யின் முஸ்லிம் மவுலானாக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜமாத் உல் உலாமா ஹிந்த் அமைப்பின் முசாபர்நகர் மாவட்ட அமைப்பாளரான மவுலானா முப்தி அசத் காஸ்மி கூறும்போது, ‘முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா என்பது அழகு காட்ட அல்ல.இஸ்லாத்தின் ஒரு அங்கமான புர்கா பெண்களின் முகம் மற்றும் உடல் அழகை மறைக்க அணிவதாகும். இதை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தியது சரியல்ல. முஸ்லிம்களின் மதஉணர்வுகளை சீண்டுவதே அதன் நோக்கமாக உள்ளது. இதுபோல், புர்காவை வைத்து முதன்முறையாக நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு இனி வேறு எங்கும் நடைபெறக் கூடாது. இந்தவகையில், வேறு எந்த மதங்களையும் புண்படுத்தக் கூடாது.’ எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. “புர்கா அணிந்த பெண்களுக்கும் கலைநிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்கவே இதை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.எனினும், ஸ்ரீராம் கல்லூரியில் நடத்தப்பட்ட புர்கா ஆடை அலங்கார அணிவகுப்பின் மீது காவல்நிலையங்களிலும் புகார் அளிக்க சில முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முயற்சிக்கப்படுகிறது.