ஹரியானா:கைதிகளின் குடும்பத்தினரிடம் சிறை ஊழியர் எனக்கூறி பணம் பறித்த இரு கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று கைதிகளின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அதே சிறையில் இருந்த கைதிகளான மதுர் சக்சேனா, கனிஷ்க் பட்நாகர் ஆகிய இருவரும் தங்களை சிறை ஊழியர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
சிறையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளுக்கு தேவை எனக்கூறி பணம் கேட்டுள்ளனர். குடும்பத்தினரும் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், சிறையில் உள்ள தங்கள் குடும்-ப உறுப்பினரை பார்க்க வந்த போது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
இதுகுறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதுர் சக்சேனா மற்றும் கனிஷ்க் பட்நாகர் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
சக்சேனா மீது தாக்குதல், மோசடி, பாலியல் பலாத்காரம் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
மோசடி நடந்தபோது குற்றவாளிகள் இருவரும் சிறையில் தான் இருந்தனர். ‘இ — கோர்ட்’ வாயிலாக, அவர்களின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் கூட்டாளிகள் யாராவது சிறையில் இருக்கின்றனரா என விசாரித்து வருகிறோம்.
முதலில் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் மொபைல் போன் எண்களை திருடியுள்ளனர். பின், சிறை நிர்வாகத்தின் ஊழியர்கள் போல் நடித்து, கைதியின் குடும்பத்தினரிடம், கைதி காயமடைந்துள்ளார், எனவே, அவருக்கு பரிசோதனை செய்ய பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர். எவ்வாறு, அவர்கள் மூன்று கைதிகளின் குடும்பத்தினரிடம் ஏமாற்றி பணம் பறித்தனர் என்பதை வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement