‘ஏன்தான் கேப்டன் ஆனோமோ’ என்று நொந்து போய் நூடுலஸ் ஆகுமளவிற்கு நிக்சனின் நிலைமை மோசமாக போகிறது. படுத்தறாய்ங்க… சர்வாதிகாரி ஒப்பனையில் கூட அவரால் கெத்து காட்ட முடியவில்லை.
விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை போல விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் நடக்கும் சண்டை சகிக்கவில்லை. கோபத்தில் விஷ்ணு விடும் வார்த்தைகளும் திமிரான உடல்மொழியும் மட்டரகமாக இருக்கிறது. விஷ்ணுவின் நடத்தை மாஸான வில்லனாக போல் இல்லை. தூசான ஒட்டடை போல் இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
கேப்டன் ஆகி விட்டு நிக்சன் படாதபாடு படுகிறார். யாராவது வந்து ஒருவர் புகார் சொன்னால், ‘என்ன பண்றேன் பாருங்க.. எனக்குத் தெரியும்.. நான் பண்ணுவேன்’ என்று சீன் காட்டி சமாளித்து விட்டு பிறகு அப்படியே காற்றில் விட்டு விடுகிறார்.
அனுமதி பெறாமல் அடுப்பைப் பற்ற வைத்த பஞ்சாயத்து முடிந்ததும் “விதிமீறலுக்கு தண்டனை ஏதாச்சும் கொடு. நீதானே பக்கம் பக்கமா பிக் பாஸிற்கு எழுதிக் கொடுத்தே. சுவாரசியமா ஏதாவது பண்ணு” என்று நிக்சனுக்கு சொல்லிக் கொடுத்தார் விசித்ரா. “பண்ணிடுவோம். சூப்பரா பண்ணிடுவோம்” என்று சொன்ன நிக்சன், பிறகு கொடுத்த தண்டனை இருக்கிறதே, உலக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கொடுமையான தண்டனை.
நிக்சனைக் காப்பாற்றியது தொடர்பாக மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையே ‘லுலுவாய்க்கு’ சண்டை நடந்து கொண்டிருந்தது. ‘விதிமீறலை நிக்சனுக்கு சொன்னதே நான்தான். ஆனா அவனுக்கு தண்டனை கிடைக்க நான் விடமாட்டேன்” என்று சொல்லி மாயாவின் அதே ஸ்டைலில் தலையை உதறி ஸ்டைல் காட்டினார் பூர்ணிமா.
நிக்சன் தந்த கடுமையான தண்டனை
தவறு செய்த பூர்ணிமாவை தனி அறையில் ரகசிய விசாரணை செய்தார் நிக்சன். “ஸாரி. கவனிக்கலை”.. என்று பூர்ணிமா சொல்ல, “ஓ.. சமையல் லேட்டாகக் கூடாதுன்னு அப்படிப் பண்ணிட்டீங்களா..” என்று நிக்சனே பாயிண்ட்டையும் எடுத்துக் கொடுத்து “சரி.. கைகளை உயர்த்தி பத்து எண்ற வரைக்கும் நில்லுங்க” என்று மிகக் கடுமையான தண்டனையை தந்தார். இப்படி ஒரு சம்பிரதாயத்திற்கு தந்த ‘லுலுவாய்க்கு’ தண்டனையை உலகம் அதுவரை பார்த்திருக்காது.
நாள் 59. ‘புண்ணாக்குன்னு சொன்னாகூட கவலை இல்லடா’ என்கிற மாதிரி சொரணையே இல்லாத ஒரு பாடலுடன் பொழுது விடிந்தது. நாமினேஷன் வாக்குகளின் எண்ணிக்கையில் கிடைத்த டைல்ஸ்களை ஒவ்வொருவரும் முதுகில் சுமக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இரண்டு டைல்ஸ்களை மூலையில் போட்டு பாவச் சுமையை குறைத்து விதிமீறல் செய்தார் சுரேஷ். நிக்சனை அலைக்கழிப்பதற்காக ஆளாளுக்கு கொலைவெறியுடன் சுற்றுகிறார்கள்.
மார்னிங் ஆக்டிவிட்டி. ‘என்ன மாதிரியான சூப்பர் பவர் கிடைத்தால், இந்த ஆட்டத்தை ஆட சுவாரசியமாக இருக்கும்?’ என்பது தலைப்பு. “மத்தவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி ஆடுவேன். ஒவ்வொருவரும் வாரா வாரம் ஒவ்வொரு கேரக்டரா இருக்காங்க. அதைத் தெரிஞ்சுக்கிட்டு பொளீர்… பொளீர்ன்னு அடிச்சு ஆடுவேன்” என்று விஷ்ணு சொன்னது பெரும்பாலும் அர்ச்சனாவை டார்கெட் செய்தது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அடுத்த வந்த அர்ச்சனா “Time Freeze & Reverse பவர் கிடைச்சா, திருப்பிப் போட்டு குறும்படங்களைப் பார்த்துட்டு வந்து அதுக்கேத்த மாதிரி ஆடுவேன்” என்றார்.
அடுத்த வந்த மாயா “ஒரு வாரம் தப்பு பண்ணிட்டேன். அதைக் கரெக்ட் பண்ணிடுவேன். இங்க உண்மையா கேம் ஆடறவங்க நாலே பேர்தான். போர் அடிக்குது. என் பவரை வெச்சு மத்தவங்களையும் கேம் ஆட வெச்சா சுவாரசியமா இருக்கும்” என்று மற்றவர்களை பங்கப்படுத்தினார். ‘நான்கு நபர்கள் மட்டுமே ஆட்டத்தை ஆடுகிறார்கள்’ என்று மாயா சொன்னது யாரை? மாயா, பூர்ணிமா, தினேஷ் மற்றும் விசித்ராவாக இருக்குமோ?!
விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டை
தன்னை மறைமுகமாக விஷ்ணு குத்திப் பேசியது குறித்து அர்ச்சனாவிற்கு கோபம் வர, அது குறித்து ‘பொளீர். பொளீர்ன்னு அடிப்பீங்களா.. எங்க அடிங்க பார்க்கலாம்” என்று விஷ்ணுவிடம் பிறகு சண்டையிட்டார். பதிலுக்கு பத்து மடங்கு கோபத்துடன் விஷ்ணு எகிறி வந்தார். குழாயடிச் சண்டை போல இருவருக்கும் ஆவேசமான மோதல் நடக்க, அதைப் பற்றியே கவலைப்படாமல் சுற்றிலும் சிலர் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். சிலர் நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
விஷ்ணு இப்படி சண்டைக்கோழி போல சிலிர்த்துக் கொண்டு வருவதும், கோபத்தில் மட்டரகமான வார்த்தைகளை விடுவதும் ரசிக்கத்தக்கதாக இல்லை. அதிலும் ஒரு பெண்ணிடம் இத்தனை ஆவேசமாக மோதும் போது அவரின் இமேஜ் மொத்தமாக காலியாகி விடும். (ஆனாலும் சொல்ல முடியாது, இப்படி நடந்து கொள்ளும் சிலருக்குத்தான் வெற்றிக் கோப்பை கிடைக்கிறது). ஒரு பெண்ணிடம் அவரது தவறைச் சுட்டிக் காட்டுவதோ, சண்டையிடுவதோகூட பெரிய பாதகமில்லை. ஆனால் அதிலும் ஒரு கண்ணியத்தைக் காட்டுவதுதான் உண்மையான ஆண்மைத்தனம். அர்ச்சனாவை ப்ரவோக் செய்து கொண்டேயிருப்பதில் விஷ்ணுவிற்கு பெரும்பாலும் வெற்றி கிடைத்து விடுகிறது.
விஷ்ணுவின் கிண்டல் மறைமுகமாக இருந்ததை வேறு விதமான தந்திரத்துடன் அர்ச்சனா எதிர்கொண்டிருக்கலாம். ‘என்னைத்தானே சொன்னே?” என்று வீம்பாக ஜீப்பில் சென்று ஏறுகிறார். இதை விசித்ரா சுட்டிக் காட்டிய போது “உங்களுக்கு வந்தா வேற மாதிரி பேசுவீங்க மேம்” என்று அந்தப் பக்கமும் எகிறினார் அர்ச்சனா. விஷ்ணு வார்த்தைகளால் தாக்கும் போது யாரும் தனக்காக ஆதரவிற்கு வரவில்லை என்கிற கோபமாக இருக்கலாம். விஷ்ணுவின் ராவடி அந்த அளவிற்கு இருக்கிறது.
‘அவரு வார்த்தைகள்லதான் சொல்றாரு. நெஜம்மாலாம் அடிச்சுடுவாரா என்ன?’ என்று அர்ச்சனாவிற்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று அபத்தமாக கருத்து சொன்னார் விக்ரம். கைகளால் தரும் அடியை விடவும் வார்த்தைகளின் அடியில்தான் காயம் அதிகம் நேரும். “கைய நீட்டி நீட்டி சொன்னதுக்கு அதுதானே அர்த்தம்?” என்றார் அர்ச்சனா. நிக்சனின் ஒரு சாதாரண கேள்விக்கு பூர்ணிமா ஓவர் ரியாக்ஷனுடன் கோபித்துக் கொள்ள “என்னதிது. நான் எது சொன்னாலும் எல்லோரும் காண்டாவறீங்க?” என்று டென்ஷன் ஆனார் நிக்சன்.
‘நிதானமா ஹாண்டில் பண்ணுடா நிக்சன்” என்று விசித்ரா சமாதானப்படுத்த “காலைல இருந்து காஃபி கூட குடிக்கலை. ஒவ்வொரு வேலையையும் நானே வந்து சொல்லணுமா. சொன்னா அப்படியே பிக்கப் பண்ணிட்டு செய்ய மாட்டீங்களா?” என்று கான்டிராக்ட்டர் நேசமணி வடிவேலு போல நிக்சன் அல்லாடிக் கொண்டிருக்க “பதவின்னு வந்துட்டா அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி எரியும் நெருப்பில் ஏரோபிளேன் பெட்ரோலை ஊற்றினார் சுரேஷ்.
ஆரம்பித்தது ராஜாங்க டாஸ்க்
ராஜாங்கம் என்றொரு வீக்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். போட்டியில் வெல்பவர் சிறிது நேரத்திற்கு வீட்டின் ராஜாவாக இருக்கலாம். இதில் ஐந்து விதமான பாத்திரங்கள் உண்டு. சர்வாதிகாரி, மக்கு ராஜா, ரொமான்டிக் ராஜா, ஒருதலைப்பட்ச ராஜா, 25-ம் புலிகேசி இம்சை ராஜா. இதில் எதில் வேண்டுமோ, போட்டியில் வெல்பவர் தேர்வு செய்து கொள்ளலாம். சிறந்த ராஜாவிற்கும் ஒரு சப்போர்ட்டிங் கேரக்ட்டருக்கும் ஸ்டார் கிடைக்கும்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஹரிஷ், ‘யாருக்கு ஸ்டார் தரலாம்’ என்பதை முடிவு செய்த போது பொத்தாம் பொதுவாக ‘ஸ்மால் பிக் பாஸ் ஹவுஸிற்கு’ என்று தந்து சென்று விட்டார். யாராவது ஒருவரைத் தேர்வு செய்து அவர் அளித்திருக்கலாம். இப்போது அந்த ஸ்டார் யாருக்கு என்பதில் சின்ன வீட்டில் குடுமிப்பிடிச் சண்டை ஆரம்பித்தது. ‘டாஸ்க் ஜெயிச்சதுக்குத்தான் ஹரிஷ் கொடுத்தாரு. எனக்கு ஸ்டார்லாம் தேவையில்ல. பூர்ணிமாவிற்கு தரலாம்” என்று ரொமான்டிக் ராஜா மூடில் சிபாரிசு செய்தார் விஷ்ணு. “நான், சுரேஷ், நிக்சன் ஆகிய மூணு பேரும்தான் எண்டர்டெயின்மென்ட் பண்ணி கெஸ்ட்டை எங்கேஜ் செய்தோம். எங்கள்ல ஒருத்தருக்குத்தான் தரணும்” என்றார் அர்ச்சனா.
‘மணிக்கு ஏற்கெனவே மூணு ஸ்டார் இருக்கு. அதை ஈக்வல் பண்றதுக்காக விஷ்ணுவிற்குத் தரலாம்” என்றார் ரொமான்டிக் ராணி மூடில் இருந்த பூர்ணிமா. ‘டாஸ்க்லாம் எண்டர்டெயின்மென்ட்ல வராது” என்று குறுக்கே கட்டையைப் போட்டார் அர்ச்சனா. கடைசியில் விஷ்ணுவிற்கு தரப்படுவதாக மெஜாரிட்டியில் முடிவானது. ‘யார் வேண்டாம்’ என்று சொன்னாரோ அவருக்கே வந்து சேர்ந்தது. இதுவும் விஷ்ணுவின் ஸ்ட்ராட்டஜியோ என்னவோ.
மற்றவர்கள் யாருக்காவது ஸ்டார் கிடைத்திருந்தால் கூட அர்ச்சனா சும்மா இருந்திருப்பார். ஜென்ம விரோதியான விஷ்ணுவிற்கு கிடைத்ததால் கோபமான அர்ச்சனா, வெளியில் வந்து “மணிக்கு மூணு ஸ்டார் இருக்காம். அதனால விஷ்ணுவிற்கு கொடுக்கறாங்களாம். இதுக்கு எதுக்கு மீட்டிங். இவங்களே முடிவு பண்ணிக்கலாமே” என்று உள்ரகசியத்தை பூசணிக்காய் போல் பொதுவில் போட்டு உடைத்தார். ‘என் கருத்தை யாருமே காதுல கேட்டுக்கலை. சுவத்து கிட்ட பேசின மாதிரி இருக்கு’ என்பது அர்ச்சனாவின் ஆதங்கம்.
‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனைகள்’
இதனால் அர்ச்சனாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே மீண்டும் முட்டிக் கொண்டது. இந்தச் சண்டை இந்த முறை அதிக உக்கிரமாக இருந்தது. இப்போது ஒலித்த ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம வார்த்தைகள்’ அதிக மோசமானதாக இருந்தது. கோபத்தில் கன்னாபின்னாவென்று வார்த்தைகளை விட்டார் விஷ்ணு. கோபத்தில் அவர் எகிறி எகிறி வந்தது பார்க்கவே மட்டமான செய்கையாக இருந்தது. அர்ச்சனாவும் விடாமல் மல்லுக்கட்டினார். ‘நீதான் குப்பை’ என்றும் ‘நீதான் குப்பைத் தொட்டி’ என்றும் பரஸ்பரம் அடித்துக் கொண்டார்கள்.
‘உள்ளே போய் போர்த்திக்கிட்டு அழுவு’ என்று விஷ்ணு குத்திக் காண்பிக்க “இனிமே நான் அழுதுட்டேன்னா.. பாரு’ என்று வீறாப்புடன் சொன்னார் அர்ச்சனா. மற்றவர்கள் எவருமே இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இதை விடவும் ஆபாசம். மாயா நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க, விசித்ரா மட்டுமே முன் வந்து விஷ்ணுவைக் கட்டுப்படுத்த முயன்றது நல்ல செய்கை.
‘நீங்க செய்யறது தப்பு விஷ்ணு. வெளில தப்பா தெரியும்” என்று தனியாகச் சென்று விஷ்ணுவிடம் அவரது தவறை பூர்ணிமா சுட்டிக் காட்டியது நல்ல விஷயம். கோபம் வந்தால் விஷ்ணுவிற்கு கண், மண் தெரிவதில்லை. அவரை மிக எளிதாக டிரிக்கர் செய்து விட முடிகிறது. இதுவொரு பலவீனமான அம்சம். அதிலும் பிக் பாஸ் ஆட்டத்திற்கு உதவாத அம்சம்.
விஷ்ணுவால் அர்ச்சனா தாக்கப்பட்டது குறித்து பூர்ணிமாவிற்குள் அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே பிறகு அர்ச்சனாவுடன் நடந்த உரையாடல்களில் எல்லாம் கனிவாகப் பேசினார். “ஊருக்கு முன்னாடி போய் நீங்கள்லாம் தூங்கிட்டீங்க. நாங்கதான் கண்விழிச்சு விருந்தினரை கவனிச்சிக்கிட்டோம்” என்று அர்ச்சனா எகிறி விழ “ஏங்க அப்படில்லாம் பேசறீங்க.. கண்ணு முழிச்சு டாஸ்க் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. அப்படியெல்லாம் கோபமாகப் பேசாதீங்க” என்றெல்லாம் தன்மையாக பேசியது பூர்ணிமாதானா என்று ஆச்சரியமாக இருந்தது. விஷ்ணுவும் பூர்ணிமாவும் ரொமான்ஸ் கூட்டணியில் இருப்பதால் விஷ்ணு மீதுள்ள கோபத்தை பூர்ணிமா மீதும் அர்ச்சனா சிதற விடுகிறார் போல.
மீண்டும் ஒரு முட்டைப் பிரச்னை – விடாது கருப்பு
முட்டைப் பிரச்னை இன்னொரு வடிவத்தில் வந்து உருண்டோடி விளையாட ஆரம்பித்தது. 13 முட்டைகளை வேக வைக்க வேண்டும். இது அர்ச்சனாவின் பணி. விஷ்ணுவுடன் சண்டைபோட்ட மூடில் அவர் அப்செட்டில் இருந்தாரோ, என்னமோ. கணக்கு தவறி விட்டது. அர்ச்சனா மீது அனுதாபம் பார்த்து உதவ வந்த பூர்ணிமா, இருப்பில் உள்ள அனைத்து முட்டைகளையும் போட்டு விட்டார். இருவருமே எண்ணிக்கையைக் கவனிக்கவில்லை. எக்ஸ்ட்ரா முட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் இந்தப் பிழை தெரிந்தது. தேவைக்கும் அதிகமாக ஐந்து முட்டைகளை வேக வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பான உரையாடல் வீட்டிற்குள் பரவ, அர்ச்சனாவின் பக்கம் பெரும்பாலான பார்வைகள் திரும்ப, அவரோ பூர்ணிமாவை கை காட்டினார். “ஏங்க.. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தானே வந்தேன்.. நானும் கவனிக்கலை. ஸாரிங்க. ரெண்டு பேரும்தான் தப்பு பண்ணிட்டோம்” என்று ‘படுத்தே விட்டானய்யா’ ரேஞ்சிற்கு கனிவாக பேசினார் பூர்ணிமா. அப்போதாவது அர்ச்சனா சமாதானம் ஆகியிருக்கலாம். அப்போதும் வீம்பு குறையாமல் மல்லுக்கட்டியது அநாவசியமானது. “உங்க மேலதான் தப்பு அர்ச்சனா. சமையலுக்கு நீங்கதான் பொறுப்புல இருந்தீங்க. அடுத்த முறை இப்படி பண்ணாதீங்க” என்று தீர்ப்பளித்து பிரச்சினையை தணித்தார் நிக்சன்.
ராஜாங்கம் டாஸ்க் ஆரம்பித்தது. ‘மங்குனி அமைச்சர்களே.. அவசரப்படாதீர்கள். உங்கள் கடமையுணர்ச்சியைப் பார்த்து எனக்கு புல்லரிக்கிறது’ என்று டாஸ்க் ஆட துடித்த போட்டியாளர்களை பங்கமாக கலாய்த்தார் பிக் பாஸ். பிக் பாஸ் ஒரு நிறத்தைச் சொல்லுவார். பஸ்ஸர் அடித்ததும் அந்த நிறத்தில் உள்ள பொருள் ஏதாவது எடுத்துச் சென்று ஓடிப் போய் கோட்டில் நிற்க வேண்டும். மஞ்சள் என்று அறிவிக்கப்பட்டதும் பீன் பேக் முதற்கொண்டு பலவற்றை தூக்கிக் கொண்டு ஓடினார்கள். மஞ்சள் நிறம் ஓரமாக ஒட்டியிருந்த ஒரு சிறிய பொருளை கொண்டு போனாலும் முதலில் கோட்டிற்குள் சென்றதால் நிக்சன் முதல் ராஜாவாக ஆனார்.
இம்சை அரசனாக செயல்பட்ட சர்வாதிகாரி
சர்வாதிகாரி ராஜா ஆப்ஷனை தேர்ந்தெடுத்தார் நிக்சன். ஆனால் அது இம்சை அரசன் மாதிரிதான் இருந்தது. சர்வாதிகாரம் என்றால் தவிர்க்கவே முடியாமல் நினைவிற்கு வருபவர், இரண்டாம் சீசனில் வந்த ஐஸ்வர்யா தத்தாதான். ப்பா. நீலாம்பரியையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு கெத்து காட்டியவர். ‘தாடி’ பாலாஜியின் தலையில் குப்பை கொட்டி பரபரப்பை ஏற்படுத்தியதையெல்லாம் மறக்க முடியுமா?
பதவியேற்பு விழாவிற்கு வருகைதரும் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மங்கைகள் மலர் தூவ, வீரர்கள் பாதுகாப்பு அளிக்க ராஜமாதா விசித்ரா கிரீடம் சூட்ட தயாராக இருந்தார். ஆனால் ராஜாவோ, நீதிமன்றத்திற்கு செல்லும் குற்றவாளி போல hoodie போட்டு மூடிக் கொண்டு, தலையைக் குனிந்தபடி வந்தார். பதவியேற்ற ராஜா, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் ‘யாராவது குறுக்கே பேசினால்…’ என்று ஆரம்பிக்க “குறுக்கெலும்பு உடைந்து விடும் என்று சொல்ல வருகிறீர்களா மன்னா?!” என்று ரைமிங்காக எடுத்துக் கொடுத்தார் விக்ரம். மனதிற்குள் ‘புலவர் பானபத்திர ஓணான்டி’ என்று நினைப்பு. ‘யாரடா..அங்கே. இவனைக் கொண்டு போய் மழைத்தண்ணீரில் உருட்டுங்கள்” என்று உத்தரவிட்டார் இம்சை அரசர். ‘மன்னருக்கு எடுத்துக் கொடுத்தேன். இது ஒரு தவறா?” என்று பிறகு தனியாகப் புலம்பினார் விக்ரம். (ஹப்பாடா! இந்த எபிசோட்ல ஒரு சீன்ல அண்ணன் வந்துட்டாரு!).
‘நாமினேஷன் பாவ மூட்டைகளை கீழே இறக்கி வைத்து விடலாம். இனி நீங்கள் அதைச் சுமக்கத் தேவையில்லை’ என்று மன்னர் பதவியை வைத்து ஸ்கோர் செய்ய முயன்றார் நிக்சன். சர்வாதிகார ராஜா என்றால் தண்டனைதான் அதிகம் கொடுப்பார். கருணை காட்ட மாட்டார். எனவே இது காரெக்ட்டருக்கு பொருந்தவில்லை. விக்ரம், ஜோவிகா, ரவீனா ஆகிய மூவரையும் மழைத் தண்ணீரில் முட்டி போட வைக்க ‘மன்னர் ஒழிக’ என்று வாழ்த்தியபடியே அவர்கள் அரைமனதாக தண்டனையைச் செய்தார்கள். நிக்சனின் ராவடிகள் பிக் பாஸையே கடுப்பேற்றியிருக்கும் போல. அத்துடன் நிக்சனின் அதிகாரத்தை முடித்து வைத்தார்.
நிக்சனின் அதிகார எல்லைக்குள் வர சுரேஷ் விரும்பவில்லை போல. எனவே இன்னொரு நாட்டு பிரஜை போலவும் அந்நிய நாட்டு உளவாளி போலவும் காட்சிக்குள் வராமல் ஒளிந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். நிக்சன் மீது என்ன கடுப்போ?!
அமாவாசைக்குள் ஒரு சோழர் பரம்பரை
விதிமீறல்கள் கன்னாபின்னாவென்று நிகழ்ந்து கொண்டிருந்தன. பூர்ணிமா ஒரு பக்கமும் ஜோவிகா இன்னொரு பக்கமும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நிக்சன் ஒடி ஓடி களைத்து விட்டார் போல. ‘நாய் குலைக்கட்டும். நாம என்ன பண்றது” என்று சொன்னவர், பிறகு ‘அய்யோ.. சோத்துல வெஷத்தை வெச்சுடுவாங்களே’ என்பது நினைவிற்கு வரவே ‘எழுப்புங்கப்பா.. அப்புறம் கேப்டன் கேட்கலைன்னு சொல்லி மணியை அடிப்பாங்க” என்றார், பீதியுடன்.
‘மாயா, பூர்ணிமா கூட்டணி உடையணும். அப்பத்தான் நல்லாயிருக்கும்” என்று ராஜதந்திரி லெவலில் விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தார் சுரேஷ். “என்னை வெச்சு அவங்க ரெண்டு பேரும் காமெடி பண்ணிட்டிருக்காங்க.. பார்ப்போம் எது வரைக்கும் போகுதுன்னு” என்றார் விஷ்ணு. (தெரிஞ்சிடுச்சா?!)
கூல் சுரேஷ் மைக்கை மாட்டாமல் சுற்றிக் கொண்டிருக்க பிக் பாஸ் எச்சரிக்கை கேட்டது. ‘ஒரு விதிமீறல் நடந்திருக்கு கேப்டன்’ என்று சுரேஷ் டைல்ஸ்களை ஒளித்து வைத்தது பற்றி மாயா புகார் சொல்ல “இருங்க. நான் பார்த்துக்கறேன்” என்று கெத்தாக சொன்ன நிக்சன் ‘ண்ணோவ்.. அதை எடுத்து பையில போடுங்கண்ணா” என்று சுரேஷிடம் கெஞ்ச “ஜோவிகா தூங்கறப்ப என்ன பண்ணிட்டு இருந்தே. நான் வேணுமின்னே கூட பண்ணலாம். இப்ப என்ன பண்ணப் போறே?!” என்று துளியும் தயக்கம் இல்லாமல் கெத்தாக பேசினார் சுரேஷ். அமாவாசைக்குள் இருக்கும் ராஜராஜசோழன் விழித்துக் கொண்டார் போல. இந்த ராவடியின் இடையே ‘கேப்டன், கேரட் அல்வா வேணும்” என்று சிணுங்கிய ரவீனாவை என்னதான் செய்யலாம்?!
அடுத்த ராஜாவாக யார் வந்து என்னென்ன ஏழரைகளைக் கூட்டப் போகிறார்களோ?!