India National Cricket Team: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) பின் இந்திய ஆடவர் சீனியர் அணி ஆஸ்திரேலிய அணியுடன் (Team Australia) 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்காத நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை பெற்றார்.
அடுத்தடுத்து டி20 போட்டிகள்
ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சிராஜ், கேஎல் ராகுல் ஆகியோர் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக, ஷ்ரேயாஸ் ஐயர் வரும் நான்காவது போட்டியில் இந்திய அணியுடன் இணைக்கிறார். அவர் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த மூன்று போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக உள்ளார். நான்காவது போட்டி நாளையும், கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி (Team India) தென்னாப்பிரிக்காவுக்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் தொடக்கம் வரை அங்கு இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா (Team South Africa) உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாட உள்ளது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஸ்குவாடை ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்த பின் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
டிராவிட் ரீ-என்ட்ரி, விராட் ஓய்வு
மேலும், தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் (Rahul Dravid) ஒப்பந்தம் கடந்த நவ.19ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இந்த தென்னாப்பிரிக்கா தொடர் முதல் அவரின் ஒப்பந்தம் ஓராண்டு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடரும் நிலையில், கில், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ், பும்ரா, சிராஜ், ஷமி, ஜடேஜா உள்ளிட்டோர் இந்த தொடர்களில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான தகவல்களின் அடிப்படையில் விராட் கோலி (Virat Kohli) இன்னும் சில மாதங்களுக்கு லிமிடெட் ஓவர் (டி20, ஒருநாள்) போட்டிகளில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர் இடத்தில் ருதுராஜ் (Ruturaj Gaikwad) இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால் யார் கேப்டன் பொறுப்பை வகிப்பார்கள் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே டி20 தொடர்களில் இந்திய அணி 5க்கும் மேற்பட்ட கேப்டன்களை பார்த்துவிட்டதை நாம் அறிவோம். இந்த சீசனில் சூர்யகுமார் கேப்டனாக (Suryakumar Yadav Captaincy) செயல்பட்டாலும் அது நிரந்தரமில்லை என்பதை அவரும் அறிவார். அப்படியிருக்க சிக்கல் இல்லாமல் டி20 கேப்டனாக வலம் வந்த ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
டி20 உலகக் கோப்பை வரை கேப்டன்
அவரின் உடல்தகுதி இன்னும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவரை கேப்டனாக்க முடியாது. எனவே, அந்த பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மாவிடமே (Rohit Sharma Captaincy) ஒப்படைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் ரோஹித், விராட் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரோஹித்திடம் பிசிசிஐ (BCCI) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், பிசிசிஐ வட்டராத்தை சேர்ந்த ஒருவர், ஊடகம் ஒன்றுக்கு இதுகுறித்து பேசி உள்ளார். அதில்,”ஆம், ஹர்திக் மீண்டும் வரும்போது அணிக்குள் என்ன நடைபெறும் என்ற கேள்வி உள்ளது, ஆனால் பிசிசிஐயிடம் ரோஹித் டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டால், வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ நினைக்கிறார்கள். ரோஹித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 தொடருக்கு சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க | தோனி தூக்கப்போகும் அந்த மூன்று வீரர்கள் யார் யார்?… சிஎஸ்கேவின் முக்கிய தேவைகள்!