வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: யுனெஸ்கோவின் நிர்வாக குழுவிற்கு துணைத்தலைவராக பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்ட போதிலும், கோயில்களை இடிக்கும் அந்நாட்டின் போக்கு மாறவில்லை. பாகிஸ்தானில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஹிந்துக்களின் கோயில்களை சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது, ஹிந்து மத சிறுமியை கடத்தி சென்று மதம் மாற்றி திருமணம் செய்து வைப்பது போன்ற நிகழ்வுகள் அங்கு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. இதனால், அந்நாட்டில் ஹிந்துக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
யுனெஸ்கோவின் நிர்வாக்குழுவின் துணைத்தலைவராக சமீபத்தில் பாகிஸ்தான் தேர்வானது. இருப்பினும், இதற்கு பிறகும் ஹிந்து கோயில்கள் குறிப்பாக யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோயில்களும் இடிக்கப்பட்டு உள்ளன.
சிந்து மாகாணத்தின் தர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிங்லாஜ் மாதா மந்தீர் என்ற ஹிந்து கோயிலை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். நீதிமன்ற உத்தரவுப்படி இடித்தோம் என காரணம் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட இடம் என அறிவிக்கப்பட்ட இடத்தையும் பாகிஸ்தான் அதிகாரிகள் இடித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே அமைந்துள்ள சாரதா பீடத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது. இதற்கு அருகிலேயே, பாகிஸ்தான் ராணுவத்திற்கு என ‛காபி ஹவுஸ்’ கட்டப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த இரு நிகழ்வுகளும் ஹிந்துக்கள் மத்தியில் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement