விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதனை ஊராட்சியில் உள்ளது விருத்தகிரிக்குப்பம் கிராமம். இங்கு இயங்கிவந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதையடுத்து இக்கிராம மக்கள், அங்குள்ள ஊராட்சித் தலைவரிடம் தெரிவிக்க, அவர், ‘நீங்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. நான் ஏன் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கூறியதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவார காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் விருத்தாசலம் – முதனை சாலையில் 2 மணி நேரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் வந்து அவர்களை சமாதானப் படுத்தினார். குடிநீர் வழங்கலுக்கான மின் மோட்டார் சரி செய்யப்படும். அதுவரை மாற்று ஏற்பாடாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றார். இருப்பினும் போராட்டத்தைக் கைவிட மறுத்த கிராம மக்கள், எங்கள் கிராமத்தை ஊராட்சித் தலைவர் புறக்கணிக்கிறார்.
போதிய வடிகால் வசதியில்லாமல் எங்கள் கிராமச் சாலையில் கழிவுநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது என்று கூறி, அதையும் அவரிடம் காட்டி, ஆவேசத்துடன் பேசினர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அந்த சேற்றில் விழுந்து உருண்டு, தங்கள் கிராமத்தின் நிலைமையை வீடியோ எடுக்க, அது வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்தச் சூழலில் நேற்றும் விருத்தகிரிகுப்பத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் விரக்தியில் உள்ளனர்.