குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises)
வேலூர் மாவட்டத்தில் சிறுதானிய அப்பளம் (Multi Millet Papad) தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவலாம்.
பெரும்பாலும் உளுந்து, அரிசியைப் பயன்படுத்தியே அப்பளம் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று சிறுதானியங்களான சிவப்பு காராமணி, கேழ்வரகு, கம்பு, சோளம், வெள்ளைச் சோளம் உள்ளிட்டவற்றைச் சம அளவுக்கு எடுத்துக்கொண்டு, சிறுதானிய அப்பளம் உருவாக்கலாம். சிறுதானியங்களில் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருப்பதால், இது உடல் நலனுக்கு உகந்தது. அதனால் வாடிக்கையாளர் மத்தியில் சிறுதானிய அப்பளத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் சிவப்பு காராமணி ஏறக்குறைய 35,000 ஏக்கர், கேழ்வரகு 16,000 ஏக்கர், கம்பு 5,000 ஏக்கர், சோளம் 12,500 ஏக்கர், வெள்ளை சோளம் 15,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இவற்றிலிருந்து தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து, சிறுதானிய அப்பளம் தயாரித்து 200 கிராம் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலைய 175 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.
வேலூர் மாவட்டத்தில் நிலக்கடலை தோலின் சாம்பலைக் கொண்டு கட்டுமான துணைப் பொருளைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைக்கலாம்.
பொதுவாக, எந்தவொரு பொருளை எரித்தாலும் எஞ்சுவது சாம்பலே. நிலக்கடலையில் சிலிக்கா (Silica), அலுமினா (Alumina) போன்ற பொருள்கள் கலந்திருக்கும். ஆனால், நிலக்கடலையின் சாம்பலில் இந்தப் மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்திருக்கும். சிலிக்கா, அலுமினா இரண்டும் கான்கிரீட் கலவைக்கு உறுதியையும் நீடித்து உழைக்கும் தன்மையையும் கொண்டிருப்பதால் சிமெண்ட் உடன் நிலக்கடலையின் சாம்பலை தேவையான அளவுக்குச் சேர்த்து கான்கிரீட் உருவாக்கலாம்.
சிமெண்ட், ஜல்லி, மணல் போன்றவற்றை இறுக்கிப் பிடிக்கவும் நிலக்கடலையின் சாம்பல் உதவுவதால் வீடு, அலுவலகம், தொழிற்சாலையின் கட்டடங்கள் மற்றும் சாலையோரத் தடுப்புகள், பாலங்கள், சிமெண்ட் குழாய்கள் போன்ற பலவற்றிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதோடு, கட்டுமானங்களின் போது பயன்பத்தப்படும் சிமென்ட்டின் தேவையையும் குறைப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு புராடக்டாகவும் இதை விளம்பரப்படுத்தலாம்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 1,00, 000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்த நிலக்கடலையை எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கிருந்தும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நிலக்கடலையைப் பயன்படுத்தி உபபொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிடமிருந்தும் தோலைக் கொள்முதல் செய்து நிலக்கடலை சாம்பலை உருவாக்கி, அதை கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு துணைப் பொருளாக வழங்கி, அதன் வழியே பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை பெறலாம்.
வேலூர் (திருப்பத்தூர்) மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் கிளாம்பிங் ரிசார்ட்ஸ் (Glamping resorts) அமைக்கலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கானாட்டல் (kanatal) எனும் இடத்தில் உள்ளது ஈகோ கிளாம்ப் (Eco Glamp). இதை முன் மாதிரியாகக் கொண்டு ஏலகிரியிலும் கிளாம்பிங் ரிசார்ட்ஸ் உருவாக்கலாம். அண்மைக்காலமாக, ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து, அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அவர்கள் அந்த மலையில் தங்கி, இயற்கையின் அழகை ரசிப்பதற்குத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் போதுமான அளவுக்கு இல்லை. இங்கே கிளாம்பிங் ரிசார்ட்ஸ் அமைத்து, அங்கே தரமான சைவ, அசைவ உணவுகள், நவீன படுக்கையறை, குளியறை, உடற்பயிற்சி மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்.
இவ்வாறான வசதிகளை தரும்போது ஏலகிரியின் இயற்கை அழகை ரசிப்பதோடு, தூய்மையான காற்று, ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றை அனுபவிக்கும்போது மன அழுத்தம் குறைந்து ஆரோக்கிய பலன்கள் கூடலாம். இந்த ரிசார்ட்டில் கூடுதலாக சாகசப் பிரியர்களுக்கு சிப் லைனிங் (Zip Lining), ஸ்கை சைக்கிளிங் (Sky Cycling), ஜெயன்ட் ஸ்விங் (Giant Swing) போன்ற விளையாட்டுகளையும் அமைக்கலாம்.
கிளாம்பிங் ரிசார்ட்டில் டென்ட், மரவீடு, டைனி வீடு (Tiny House), பப்பிள் ஹவுஸ் (Bubble House)என பல வகைகளில் உருவாக்கி ஒவ்வொரு வகைக்கேற்ப சுமார் 2,500 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கட்டணம் (நாளொன்றுக்கு) வசூலிக்கலாம். ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஏனைய மாதங்களில் மழைக் காலங்கள் தவிர்த்து, பிற மாதங்களில் சாகசப் பிரியர்களின் வருகையும் இருக்கும் என்பதால் ஆண்டொன்றுக்கு கிளாம்பிங் ரிசார்ட்ஸ் அமைப்பதன் வழியே பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் ஏரியின் நடுவே ஒரு கேளிக்கை மண்டபம் அமைக்கலாம்.
புங்கனூர் ஏரி சுமார் 60 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. தற்போது சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை கோயில்கள், திருமண மண்டபங்களில் நடத்துவதைக் காட்டிலும் பழம்பெரும் கோட்டை, கடலுக்கு நடுவே, விமானத்தில் பறந்துகொண்டே என மாறுபட்ட இடங்களில் நடத்துவதை ஒரு சாரார் விரும்புகின்றனர். நடுத்தர மக்களுக்கு இது போன்ற இடங்களில் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆர்வம் இருந்தாலும் செலவு அதிகம் ஆகும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுகின்றனர்.
நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் ஏலகிரியின் மலையிலிருக்கும் புங்கனூர் ஏரியின் நடுவே ஒரு கேளிக்கை மண்டபம் உருவாக்கலாம். அந்த மண்டபத்தில் குறிப்பிட்ட அளவில் தங்கும் விடுதிகள், உணவகம் உள்ளவற்றை அமைக்கலாம். ஏரியைச் சுற்றி வர ஏதுவாக நடைபாதை அமைக்கலாம். ஏரியில், தற்போது போட்டிங் மட்டுமே உள்ளது. இதை இன்னும் விரிவுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத எலெக்ட்ரிக் ஜெட் ஸ்கீயிங் (Electric Jet-Skiing) நீர் விளையாட்டை அமல்படுத்தலாம். இவ்வாறாக புங்கனூர் ஏரியை மாற்றியமைத்து உரிய கட்டணம் நிர்ணயிக்கும்போது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அதன் வழியே ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.
நம் அடுத்த `கனவு’ சென்னை…
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.