கோவை: கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து தப்பியோடினார். இவ்வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்து, 400 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. கடந்த 28-ம் தேதி காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. ரத்தினபுரி காவல்துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், ஏசி வெண்டிலேட்டர் வழியாக 28-ம் தேதி அதிகாலை கடைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கு வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. முதல் கட்ட விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர், கடையின் முன்பக்க வாகனம் நிறுத்தம் வழியாக, பாதுகாவலாளிக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து, கம்பி மீது ஏறி, ஏசி வெண்டிலேட்டர் தடுப்பை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை திருடிவிட்டு, அதேவழியில் வெளியே வந்து கடையின் பின்பக்க சாலையை அடைந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் பொள்ளாச்சி நோக்கி சென்றது தெரிந்தது.
400 பவுன் பறிமுதல்: இதையடுத்து தனிப்படையினர் பொள்ளாச்சி, பழநி, உடுமலை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். இதற்கிடையே விசாரணையில், நகைக்கடை திருட்டில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரிந்தது. இவர் மீது தருமபுரியிலும், கோவையிலும் குற்ற வழக்குகள் பதிவாகியிருந்ததும் தெரிந்தது. செல்போன் தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்த போது, பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் குடும்பத்துடன் விஜய் தங்கியிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரை பிடிக்க அங்கு சென்றனர்.
தருமபுரி காவலர்களும் விஜயின் இருப்பிடத்தை கண்டறிந்து ஆனைமலையில் முகாமிட்டனர். காவலர்கள் தனது வீட்டை நெருங்கியதை அறிந்த விஜய், வீட்டின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து வெளியே வந்து, காவலர்களை ஏமாற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மீது ஏறிக் குதித்து தப்பியோடினார். தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை செய்து, அங்கிருந்த அவரது மனைவி நர்மதாவிடம் விசாரித்தனர். சோதனையில் வீட்டில் 400 பவுன் தங்க நகை இருப்பது தெரிந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 175 பவுன் நகையுடன் விஜய் தப்பியது தெரிந்தது.
கணவன், மனைவி சதித்திட்டம்: இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது,‘‘ குற்ற வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் விஜய் இருந்த போது, போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆனைமலை சுரேஷுடன் அறிமுகம் ஏற்பட்டு, நண்பர்களாகியுள்ளனர். பின்னர், சுரேஷ் உதவியுடன் ஆனைமலைக்கு விஜய் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். பெரிய தொகையை திருடிவிட்டு செட்டில் ஆக திட்டமிட்ட விஜய், அவரது மனைவி நர்மதாவுடன் இணைந்து மேற்கண்ட நகைக்கடையில் திருட முடிவு செய்து, வாடிக்கையாளர் போல் நகைக்கடை குறித்து தகவல் அறிந்த விஜய் இக்கடைக்கு சிலமுறை நேரில் வாடிக்கையாளர் போல் வந்து வேவு பார்த்து ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழையும் இடத்தை கண்டறிந்து சம்பவத்தன்று அவ்வழியாக கடைக்குள் நுழைந்துள்ளார். கடையில் பெரியளவில் பணம் இல்லை. நன்கொடை பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரம் தொகையை திருடி விட்டு, அங்கிருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பியுள்ளார். தப்பிய விஜயை தீவிரமாக தேடி வருகிறோம்,’’ என்றனர்.
200 பவுன் இல்லை 575 பவுன் திருட்டு: இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் 200 பவுன் எனவும், பின்னர் 575 பவுன் திருட்டு போனதாகவும் புகார் வந்தது. 700 கிராம் வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளது. விஜயின் மனைவியிடம் இருந்து 400 பவுன் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விஜயை கைது செய்து, மீதமுள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்படும். அவருக்கு உள்ளே செல்வதற்கான வழி எவ்வாறு தெரிந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. திருடுவதற்காக திட்டமிடுதலில் இருந்து எல்லா விதத்திலும் விஜய்க்கு அவரது மனைவி நர்மதா உதவியாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 300 கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். விஜயின் நண்பர் சுரேஷுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார்.