சூரத்,குஜராத்தின், சூரத் நகரில் ரசாயன உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பலியாகினர்; 25 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநிலம், சூரத்தின் சச்சின் தொழிற்பேட்டை பகுதியில், ஏத்தர் நிறுவனத்தின் ரசாயன உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு தொழிற்சாலை தேவைகளுக்காக, எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆலையில் தயாராகி, சேமித்து வைக்கப்பட்டு இருந்த பெரிய தொட்டியில் இருந்த ரசாயனம் நேற்று முன் தினம் அதிகாலை 2:00 மணிக்கு வெளியேறியது.
அடுத்த சில நிமிடங்களில் அந்த தொட்டி வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, 9 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் காயமடைந்த 24 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் ஏழு பேர் காணாமல் போயினர்.
அவர்களை தேடும் பணி நேற்று காலை முதல் நடந்த நிலையில், ஏழு பேரின் உடல்கள் ஆலை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டன.
பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement