குடியுரிமைத் திருத்தச் சட்டம் உறுதியாகக் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி தலைமையில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்து வாக்குகளைக் குறிவைத்து, மீண்டும் சி.ஏ.ஏ விவகாரத்தை மத்திய பா.ஜ.க அரசு கையிலெடுக்கிறதோ என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்புகிறார்கள்.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அதற்கு அன்றைய குடியுரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் உடடினயாக ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இது தொடர்பான கணக்கெடுப்பு அடுத்த ஒரு வருடம் நடைபெறும் என்று மத்திய அரசு கூறியது.
அதே நேரத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு எந்தளவுக்கு தீவிர நடவடிக்கைகள் எடுத்ததோ, அதைவிட பல மடங்கு எதிர்ப்பு அந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எழுந்தது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), அந்த நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்கிறது.
இதுதான் அந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கக் காரணம். தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், சிறு நகரங்களிலும் போராட்டம் பரவியது. அந்தப் போராட்டம் மத்திய பா.ஜ.க அரசுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியது. அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு திணறியது. இந்த நிலையில், திடீரென கொரோனா பெருந்தொற்று பிரச்னை எழுந்ததால், சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு சி.ஏ.ஏ விவகாரத்தில் அமைதி காத்துவந்த மத்திய பா.ஜ.க அரசு, சி.ஏ.ஏ சட்டத்துக்கான விதிகளை வகுத்துவருகிறது. இதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், இந்த விதிகளை வகுக்க பல முறை காலஅவகாசம் கோரியது. இந்த நிலையில்தான், கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சி.ஏ.ஏ சட்டம் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என்று பேசியிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா. ‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தைச் சீரழித்துவிட்டார். இங்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். அதற்கு முன், 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மோடியை மீண்டும் நீங்கள் பிரதமராக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்த நாட்டின் சட்டம். அதை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை யாராலும் தடுக்க முடியாது’ என்றார்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி-யான அஜய் மிஸ்ரா, ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிகள் 2024-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதிக்குள் மத்திய அரசால் வகுக்கப்படும்’ என்று பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என்பதால், அதற்கு முன்பாகவே சி.ஏ.ஏ சட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்பட்டுவிட்டால், அதை வைத்து இந்துக்களை அணிதிரட்டவும், கணிசமான அளவில் இந்து வாக்குகளைப் பெறவும் பா.ஜ.க திட்டமிடுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.! அது பாஜகவுக்கு தேர்தலில் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.