திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வார்டுகள் பிரதான சாலைகளை ஒட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது முறையான வடிகால் வசதி இல்லாததால், நகரின் பல இடங்களில் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடுவதும்,நீர் செல்ல வழியின்றி சாலைகளிலேயே தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை திண்டுக்கல்லில் திடீரென அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதில் மழை நீர் வழக்கம்போல் சாலைகளில் ஓடி பல இடங்களில் தேங்கியது. திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அரை மணி நேரம் பெய்த மழைக்கே நீர் செல்ல வழியில்லாத நிலையில், தொடர் மழை பெய்தால் நகர் தாங்காது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக் கின்றன. இந்நிலையை தவிர்க்க, திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் முறையாக வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.