சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள், அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர், புதுசேரியிலிருந்து 700 கி.மீ கிழக்கே மையம் கொண்டிருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும். டிச.3-ல் புயலாக வலுப்பெற்று டிச.4-ல் தமிழகம் – ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில் இதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியன்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.
இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கையைத் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.
புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலின் காரணமாக கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், புயல் மற்றும் கனமழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும், இடையூறும் ஏற்படாத வண்ணம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பது, மின்சார சேவை உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.