புதுடில்லி: ‘கவர்னர் – முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (டிச.,1) விசாரணைக்கு வந்தது. வாதத்தின்போது நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தற்போதைய முட்டுக்கட்டையை கவர்னர் தரப்புதான் தீர்க்க வேண்டும் என விரும்புகிறோம். கவர்னர் – முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஒருவேளை கவர்னர் முதல்வரை அழைத்து பேசி தீர்வுகாண முயற்சித்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.
கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அளிக்காமல் வைக்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். முதல்முறை மசோதா அனுப்பப்பட்டபோதே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே. ஒரு முறை திருப்பி அனுப்பிய பின் அதை மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. Withheld என முடிவெடுத்த பின் மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்?. இவ்வாறு பல கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement