வாஷிங்டன்: வரவிருக்கும் 2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது வழக்கம். இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு புதன்கிழமை ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அந்த பேட்டியில் எலான் மஸ்க்,” 2024 நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. ஜோ பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார். அப்படியென்றால், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு, “நான் டிரம்புக்கு வாக்களிப்பேன் என்றும் கூறவில்லை. இது நிச்சயமாக இங்கே ஒரு கடினமான தேர்வாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.அப்போது, அதில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தான் அவமதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே எலான் மஸ்க் இந்தக் கருத்தையும் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடனுக்கு, தான் வாக்களித்ததாக மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.