பாட்னா: ஒடிசா மாநிலம் கியோன்ஞ்சர் மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற வேன் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வேனில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாடகை வேன் ஒன்றை அமர்த்திக்கொண்டு, தங்கள் பகுதியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் இருக்கும் கடாகோனில் உள்ள தாரணி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் கியோன்ஞ்சர் மாவட்டம் கடாகோன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பலிஜோடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, காலையில் இருந்த பனிமூட்டத்தால் வேன் ஓட்டுநரால் சரியாக பார்க்க முடியாமல், சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 7 பேரும், மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஒருவரும் என 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.