சென்னை: ”தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும்” என்று அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இது குறித்த செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்கிறது. இது அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.
“வான்புகழ் வள்ளுவர்! அறநெறி இலக்கணம் வகுத்த அவ்வை! சமரச நெறி வகுத்த வள்ளலார்! இந்த வரிசையில், தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதரின் பெருமையைப் போற்றும் வகையில் சென்னையில், அவருடைய திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று நான் அறிவித்தேன்.
சென்னை கிண்டி காந்தி மண்படம் வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருடைய திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு ‘அறிவொளி இல்லமாக’ அமைக்கப்பட்டிருக்கிறது.அறிவுலகப் பேரொளியான அவருடைய மணிமண்டபத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல, அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்திதாசர். 1881-ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ‘பூர்வத் தமிழர்’ என்று பதியச் சொன்னவர் அயோத்திதாசர். 1891-ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜன சபை’. 1907-ஆம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி, அதையே ’தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து தமிழர்களாக, சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இறுதி வரை எழுதியவர், பேசியவர், போராடியவர் அயோத்திதாசர்.
எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர்,பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர்,புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என்று பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர். இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ தந்தை பெரியார் சொன்னார். இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உருவானார்கள். “இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதியும் மதமுமே தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசருடைய 175-வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற விதமாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த, “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது. மகான் புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதருடைய சிந்தனைகளும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.