கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மை தாங்கிய கோபால் பாக்லே அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் ,மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் உள்ளிட்ட வைத்திய குழுவினருடன் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவது சம்பந்தமாகவும்,
வைத்தியசாலைக்கு தேவையான சீடி ஸ்கேனர் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் மிகவும் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலையின் பணியாளர்கள்,உத்தியோகத்தர்கள் மிகவும் குறைந்த அளவில் இருக்கின்ற போதும் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்குவதை யொட்டி தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களிடம் தெரிவித்திருந்ததுடன் இதன் தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.