மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்துவரும் சூழலில் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அங்கு 1990 முதல் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டுடனான போரால் ரஷ்யாவிலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் புடின் பேசியதாவது: நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரிய குடும்பங்களே பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். வரும் காலத்தில் ரஷ்யாவின் மக்கள்தொகையை அதிகரிப்பதே எங்கள் இலக்கு.
நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தில் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேல்தான் குழந்தைகள் இருக்கும். அதுதான் பல தலைமுறைகளாக நமது பாரம்பரியமாக இருந்தது. அதிலும் நமது பாட்டிகள் ஏழு, எட்டு குழந்தைகளைப் பெற்றனர். இது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த சிறந்த பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் புத்துயிர் தர வேண்டும்.
பெரிய குடும்பங்கள் தான் ரஷ்ய மக்களின் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அதற்கு ஒரு ஆன்மிக தொடர்பு இருக்கிறது; அதுதான் ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள்தொகையைப் பாதுகாப்பதும், அதிகரிப்பதும் தான் அடுத்து வரும் காலத்தில் எங்கள் இலக்காகும். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ரஷ்யாவின் எதிர்காலம் இதில் தான் அடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement