மாமிசத்தின் பக்கத்தில் நிற்பதுகூட பாவம் என்கிற குடும்பத்தில் பிறந்த அன்னபூரணிக்கு உலகில் தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை. அதற்கான தேடலில் அவர் சந்திக்கும் சவாலே படத்தின் ஒன்-லைன்.
ஸ்ரீரங்கத்து ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி (நயன்தாரா). அவரின் தந்தை ரங்கராஜன் (அச்யுத் குமார்) பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் அதிக சம்பளம் தரும் ரயில்வே வேலையை விட்டுவிட்டு ரங்கநாதருக்குச் சேவை செய்வதற்காகக் கோயிலில் பிரசாதம் சமைப்பவராகப் பணிசெய்பவர். சிறுவயதிலிருந்தே சமையலில் பேரார்வம் கொள்ளும் அன்னபூரணிக்கு ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்பது கனவு. இந்தியாவின் புகழ்பெற்ற சமையல்காரர்களில் ஒருவரான ஆனந்த் சுந்தர்ராஜன் (சத்யராஜ்) அவரின் ரோல் மாடல். இதனால் அன்னபூரணி சமையல் சார்ந்த பட்டப்படிப்பில் சேர ஆர்வம் கொள்ள, அவரின் தந்தை ரங்கராஜன் இறைச்சிக்கு அருகில் இருப்பதே பாவம் எனக் கருதி அதை ஏற்க மறுக்கிறார். எம்.பி.ஏ படிக்கிறேன் எனப் பொய் சொல்லி ஹோட்டல் மேனேஜ்மன்ட் படிப்பில் சேர்கிறார் அன்னபூரணி. தந்தையின் சித்தாந்தம், தனது கனவு என இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக் கிடக்கும் அவர் இறுதியில் தனது கனவில் வெற்றி பெற்றாரா, அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதே ‘அன்னபூரணி’ படத்தின் கதை.
தன்னிலையை விவரிக்கப் போராடுவது, சமையல் மீது கொள்ளும் பேரார்வத்தை வெளிப்படுத்துவது, மாமிசத்தை நெருங்கும் காட்சிகளில் தயங்குவது, இன்னல்களில் உடைந்து அழுவது என மொத்த படத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் நயன்தாரா. திரையுலகில் தன் 75-வது படத்துக்கென மெனக்கெட்டிருப்பது அவரின் நடிப்பில் தெரிகிறது. பன்னெடுங்காலம் நாயக பிம்பம் சூழ்ந்த தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் ‘நாயகனை ஊக்குவிப்பு’ செய்வதற்காகக் கதாநாயகி கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். அதற்குப் பிரதிபலன் செய்வதுபோல ஜெய்யின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. ஜெய்யும் சிறப்பாக ஊக்குவிக்கிறார், அவ்வளவே!
அதேபோல சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மோட்டிவேஷன் சொற்பொழிவைச் சிறப்பாகச் செய்கிறார்கள். வெறுப்பைச் சம்பாதிக்க எழுதப்பட்ட வழக்கமான வில்லனாக வரும் கார்த்திக் குமார் சிறப்பான தேர்வு.
‘அசத்த வரா… கலக்க வரா…’ என்று பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தமன். கத்தியைத் தூக்கி நடந்து வருவது தொடங்கி, கதவைத் திறந்து மூடுவதற்குக் கூட பி.ஜி.எம் போட்டு டபுள் டியூட்டி பார்த்திருக்கிறார். ஆனால் ஆங்காங்கே அவரின் பழைய தெலுங்கு படப் பின்னணி இசை எட்டிப் பார்ப்பது நெருடல். பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு அதீத தரத்தினால் உருவாக்கப்பட்ட விளம்பரப் படங்களில் இருக்கும் செயற்கையான ஒளியுணர்வையே தருகிறது. அது இது எதுவும் எதார்த்தமில்லை என்கிற டோனினை படத்திற்கு செட் செய்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். சமையல் போட்டிக்கான அரங்கம், சாதாரண சமையல் கூடம் எனக் கலை இயக்குநர் ஜி.துரைராஜின் கலை இயக்கத்தில் குறையேதுமில்லை.
முக்கிய கதாபாத்திரத்தின் நோக்கத்தையும், அதற்குத் தடையாக இருக்கும் பின்னணியையும் ஆரம்பித்த விதத்தில் சுவாரஸ்யத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா. ஆனால் போகப்போக அதில் தடுமாற்றம். காட்சிமொழியாக விவரிக்க வேண்டிய பெரும்பாலான விஷயங்களை வசனங்களால் திணித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு “நமது தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்”, துலுக்க நாச்சியார் கதை எனப் பல பட்டியல் இதில் சேரும். இடையிடையே வருகிற அனிமேஷன் காட்சிகளும் ஏற்கெனவே புரிந்துவிட்ட ஒன்றை மீண்டும் வலியுறுத்தும் தேவையில்லாத இடைச்செருகல்.
கதாநாயகிக்குப் பிரச்னை வருகிறது, ஒருவர் அறிவுரை வழங்குகிறார் அதிலிருந்து மீண்டு வருகிறார். இப்படி பிரச்னை – அறிவுரை ரிப்பீட்டு என்ற மோடில் திரைக்கதை புனையப்பட்டுள்ளது. இது சிக்கல்கள் வந்தவுடன் “பாரேன் இப்ப ஒருத்தர் அட்வைஸ் பண்ணுவாரு” என்று எளிதில் யூகிக்கக்கூடிய விஷயமாக மாற சுவாரஸ்யம் காணாமல் போகிறது. இரண்டாம் பாதியில் யாரவது ஒருவரை வில்லனாகக் காட்டியே தீர வேண்டும் என்கிற நோக்கில் வைக்கப்பட்ட டெம்ப்ளேட் காட்சிகள் அயர்ச்சி.
அதுபோல தனியார் சேனலில் நடைபெறும் ஒரு டிவி ஷோவுக்கு ஓயாமல் செய்திகள் வருவது, அதை மக்கள் விவாதித்துக் கொண்டிருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸு! வீட்டுச் சமையலறையில் சிக்கியிருக்கும் பெண்கள் ஏன் ஃபைவ் ஸ்டார் செஃப்கள் ஆக முடிவதில்லை என்ற ஆதங்க வசனம் கவனிக்க வைக்கிறது. ஆனால், கதை அதை முழுமையாகத் தொடாமல், செஃப் போட்டி, பழிவாங்குதல் என எங்கெங்கோ அலைந்து திரிகிறது.
மொத்தத்தில் கதையாகச் சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்திருந்தாலும், திரைக்கதையைச் சிறப்பாகக் கோர்க்காததால், எளிதில் யூகிக்கக்கூடிய ஒரு படமாகவே இந்த `அன்னபூரணி’ நமக்குப் பரிமாறப்பட்டிருக்கிறது.