The position lost by Nithyananda: The trial of the Paraguayan official | நித்தியானந்தாவால் பறிபோன பதவி: பராகுவே நாட்டு அதிகாரிக்கு வந்த சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அசுன்சியன்: சாமியார் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சரவையில் பணியாற்றிய அதிகாரி அர்னால்டோ சமோரா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஹிந்துக்களுக்கு என தனியாக ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்தியானந்தா, அந்நாட்டிற்கான தனி கொடி, பார்போர்ட், நாணயம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஐ.நா சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது அமெரிக்காவின் 30 நகரங்கள், பிரான்ஸ், கினீ நாடுகளின் நகரங்களுடன் ‘சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கைலாசாவின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண் துறை மற்றும் கைலாசா இடையே கடந்த அக்டோபர் 16ம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக கைலாசாவின் இணையதளம், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ஒப்பந்த நகல்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் பராகுவேவின் முன்னணி ஊடகங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பராகுவே பார்லிமென்டிலும் கைலாசா விவகாரம் எழுப்பப்பட்டது.

latest tamil news

இதுதொடர்பாக பராகுவே அரசு விசாரணை நடத்தியதில் கற்பனை தேசத்துடன் வேளாண் துறை ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சரவையில் பணியாற்றிய அதிகாரி அர்னால்டோ சமோரா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அர்னால்டோ கூறும்போது, “கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். பல்வேறு திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, கைலாசாவை சகோதர தேசமாக அங்கீகரித்த நியூ ஜெர்ஸி மாகாணம், அதன் பிறகு கடந்த மார்ச்சில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.