பெரிதாகும் காது துளை… இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!

காதில் கம்மல் அணிவதற்காகப் போடப்படும் துளை பல்வேறு காரணங்களால் சிலருக்குப் பெரிதாகிவிடும். சிலர் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். சிலர் அதற்கான தீர்வைத் தேடிச் செல்வார்கள். அந்த வகையில் சென்னை சூளைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரை அணுகி சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் விளைவால் காது அழுகும் நிலைக்குச் சென்றுள்ளது. காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரில் கொடுத்த கிரீம் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி உள்ளார். அந்த கிரீம் பயன்படுத்திய பிறகு அவருக்கு காதில் தொற்று ஏற்பட்டுள்ளது.

கம்மல்

தொற்று தீவிரமடைந்து காது அழுகத் தொடங்கி உள்ளது. ஒரு கட்டத்தில் தொற்று மிகவும் மோசமடைந்து அழுகி, காது அறுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

காது துளை பெரிதாவது என்பது பரவலாகக் காணப்படும் பிரச்னை. இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும், செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த காது – மூக்கு – தொண்டை மருத்துவர் சிவப்பிரியா:

“துளையிடும் சமயத்தில் காதின் கீழ்ப்பகுதிகளில் துளையிட்டு கம்மல் அணியும்போது அங்கு தோல் மட்டுமே இருக்கும். ஆனால் காதுகளின் மேல் பகுதியில் துளையிடும்போது அங்கு குருத்தெலும்புகள் (Cartilage) இருக்கும். மேல் பகுதிகளில் துளையிடும் சமயத்தில்தான் தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

எனவே காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.

வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும்.

எடை அதிகமான கம்மல்களை தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும். காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

ENT Dr. Sivapriya

துளைகள் பெரிதான பிறகு அதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி. காது மடல்களில் எந்தத் துளையை அடைக்க வேண்டுமோ அதை இன்னும் சற்று பெரிதாக்கி, சுற்றியிருக்கும் தோல் அனைத்தையும் இணைத்து, தையல் போடுவதே இந்த அறுவை சிகிச்சையாகும்.

இப்படிச் செய்யும்போது பெரிதாக இருக்கும் துளையை முற்றிலும் அடைக்க முடியும். இரண்டு, மூன்று மாதங்கள் கம்மல் அணியாமல் உரிய முறையில் காயங்களை ஆற விட வேண்டும். அதன் பிறகு புதிய துளையிட்டு மீண்டும் கம்மல் அணிந்து கொள்ளலாம்.

இந்தச் சிகிச்சை மேற்கொள்ளும்போது தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படும். துளையை முற்றிலும் அடைக்காமல் பெரிய துளையை கொஞ்சம் மட்டும் சிறிதாக்குமாறு சிலர் கேட்பதும் உண்டு. அதுவும் இயலாத காரியமே. இந்த அறுவை சிகிச்சையை முறையான மருத்துவர்களை அணுகி எடுக்க வேண்டும்.

ear

இந்தச் சிகிச்சை முறை இல்லாமல், கிரீம் மூலம் காது துளைகளை இணைக்கலாம் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர். கம்மல் அணியும் பகுதி என்பது முற்றிலும் தோலால் சூழப்பட்ட இடம் என்பதால் கிரீம், க்ளூ பயன்படுத்தி எல்லாம் ஒட்ட முடியாது. அது சாத்தியமே இல்லாத சிகிச்சை. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.