பயணிகள் ரயிலின் ஓட்டுநரும், பாதுகாப்பு காவலரும் தங்களின் வேலைநேரம் முடிந்துவிட்டது என, ரயிலை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, சத் பூஜையை முன்னிட்டு சஹர்சா டு புதுடெல்லி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ரயில் திட்டமிட்டபடி நவம்பர் 27-ம் தேதி இரவு 7:30 மணிக்கு சஹர்சாவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நவம்பர் 28-ம் தேதி காலை 9:30 மணிக்குத்தான் சஹர்சாவிலிருந்து புறப்பட்டது. இதன் காரணமாக, 19 மணி நேரம் தாமதமாக கோரக்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது இந்த சிறப்பு ரயில்.
மீண்டும் கலிலாபாத் நிறுத்தத்தை நோக்கிப் புறப்பட்ட இந்த ரயில், இடையில் வேறெங்கும் நிற்க அனுமதி இல்லை. ஆனால், எந்தவொரு முன்னறிவிப்பின்றி, உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தின் புர்வால் சந்திப்பில் ரயில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயில் புறப்பட பச்சை சிக்னல் காட்டப்பட்டும்கூட ரயில் புறப்படாததால் கீழே இறங்கிவந்த பயணிகள், ரயிலின் ஓட்டுநரும், பாதுகாப்பு காவலரும் ரயிலிலிருந்து இறங்கிச் செல்வதைப் பார்த்திருக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டு ஒரு மணிநேரம் ஆகியும், ரயில் புறப்படாததால் ரயில் நிலைய மேலாளரிடம் பயணிகள் விசாரித்திருக்கின்றனர். அப்போது, `ரயில் ஒட்டுநர் தூங்காமல் ரயிலை இயக்கியிருப்பதால், தன்னுடைய பணிநேரம் முடிவடைந்ததும், உடல்நிலையை எண்ணி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்றார்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.
“ஏற்கெனவே ரயில் புறப்படுவதில் தாமதமானதால் தண்ணீர், உணவு எதுவுமின்றி நாங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறோம்” என ஆவேசப்பட்ட பயணிகள், தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படியிருக்க, ஏற்கெனவே ஐந்து மணிநேரத்துக்கு மேல் தாமதமாக லக்னோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாரௌனி ரயிலும், புர்வால் ரயில் நிலையத்தில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டத்தால், லக்னோ நோக்கிப் பயணிக்க வேண்டிய ரயிலையும் இயக்க முடியவில்லை. பின்னர், இந்த நிலைமையைச் சரிசெய்ய முன்வந்த வடகிழக்கு ரயில்வே அதிகாரிகள், கோண்டா ரயில் நிலைய சந்திப்பிலிருந்து ரயில்வே ஊழியர்களை அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், ரயில் ஓட்டுநர்கள் வந்ததும் மாலை ஐந்து மணியளவில் ரயில்கள் புறப்பட்டன. இருப்பினும், இந்தச் சம்பவத்தால் இரண்டு ரயில்களிலும் இருந்த 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணிநேரம் புர்வால் நிலையத்திலேயே காத்திருந்து கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சஹர்சாவிலிருந்து தனது உறவினர்களுடன் புது டெல்லிக்குப் பயணித்த பயணி ஒருவர், இதைப் பற்றிப் பேசுகையில், “எங்களின் பயண நேரம் அதிகபட்சமாக 25 மணி, 20 நிமிடங்களில் முடிவடைய வேண்டும். ஆனால், இன்றோடு மூன்று நாள்கள் ஆகிவிட்டது. ரயில் ஓட்டுநர், பாதுகாப்பு காவலர் இருவரும் தூக்கத்தைக் காரணம் காட்டி ரயிலிலிருந்து இறங்கிவிட்டனர். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. உணவு வாங்க பேன்ட்ரி கார் இல்லை. இத்தனைக்கும், இது ‘சிறப்பு ரயில்’. உண்மையில், இது எங்களைப் போன்ற ஏழை பயணிகளுக்காக இந்திய ரயில்வே உருவாக்கிய சிறப்பு சித்ரவதை” என்று வேதனை தெரிவித்தார்.