புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக சொல்லி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இன்று (டிச.1) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து பேசுமாறு தெரிவித்துள்ளனர்.
முதல்வரை அழைத்து, சுமுகமாக பேசி ஆளுநர் இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியலமைப்பில் மேலிடத்தில் இயங்குபவர்களை இந்த வழக்கில் சந்திக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை நீதிபதிகள் இந்த வழக்கில் சுட்டிக் காட்டி உள்ளனர்.
முன்னதாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல் வேண்டும் என கோரியுள்ளோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் ஆட்சி காலம் ஐந்து ஆண்டுகள் தான். அந்த ஐந்து ஆண்டு காலத்தில் அரசின் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் மக்கள் பணி முடங்கும். அமச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் எதிராக ஆளுநரின் நகர்வு இருக்கிறது. அது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பது தான் எங்கள் வாதம்” என தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.
“ஆளுநர், ஏன் மசோதாக்களை திருப்பி அனுப்பினார் என்பதை சொல்லி இருந்தால் எங்கள் தரப்பில் விளக்கம் கொடுத்து இருப்போம். ஆனால், அவர் எதுவும் சொல்லாமல் மசோதாக்களை திருப்பி அனுப்பி இருந்தார். அதனால் அதனை அப்படியே நிறைவேற்றி, மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பினோம். அதற்கு அவர் ஒப்புதல் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நேரத்தை இழுத்தடிக்க குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அதனை கொண்டு சென்றுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர் தலைமையில் மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இதில் என்ன தவறு” என தமிழக அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆளுநர் ரவி, தக்க பாடம் பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். நியாயப்படி அவர் தனது பதவியில் இருந்து விலகி, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்” என வழக்கறிஞரும், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவருமான சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.