இந்தக் கால இன்டர்நெட் யுகத்தில் வரப்பிரசாதம் எனக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே, தற்போது பெரும் தலைவலியாக மாறி, இணைய வழி குற்றச் செயல்களுக்கு ஓர் காரணமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, AI-Deepfake வீடியோ தொழில்நுட்பம் மூலம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. AI-Deepfake தொழில்நுட்பம் என்பது ஒரு நபரின் புகைப்படம், குரலை வைத்து, அவரே பேசுவது போலப் போலியாக வீடியோ தயாரிப்பதாகும். சிலர், இது போன்ற வீடியோக்களைத் தயாரித்து, நண்பர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வீடியோ காலில், அவர்களே நேரடியாகப் பேசுவது போல எதிர்தரப்பினரை மிரட்டியோ, மோசடியாகவோ பணம் பறிக்கின்றனர்.
இந்த தொழில்நுட்பம் மூலம், நடிகைகளின் ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவது, நண்பர்களைப்போல பேசி போலியாக வீடியோ தயாரித்து மருத்துவ உதவி எனக் கோரி பண மோசடி செய்வது, என்ற வரிசையில் மூத்த குடிமக்களை ஆபாச வலையில் விழவைத்து, அவர்களிடம் பணம் பறிக்கும் புதிய இணைய வழிக் குற்றம் போலீஸாருக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், போலீஸார் மிரட்டுவது போன்ற போலி வீடியோக்கள் தயாரித்து மூத்தக் குடிமக்களிடம் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோசடி கும்பல் ஒன்று, கடந்த மாதம் உத்தரப்பிரதேச காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் முகம் மற்றும் குரலை வைத்து AI-Deepfake தொழில்நுட்பம் வீடியோவை உருவாக்கி, 76 வயதான முதியவரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலில் பாதிக்கப்பட்ட முதியவரின் பெயர் அரவிந்த் ஷர்மா என்று தெரியவந்திருக்கிறது. காசியாபாத்தில் தனியாக வசித்துவருபவரான இவர், தனியார் நிறுவனமொன்றில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில்தான், முதல் முறையாக ஸ்மார்ட்போனை வாங்கி, அதில் ஃபேஸ்புக் (Facebook) கணக்கைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 4-ம் தேதி, இவருக்கு வீடியோ கால் ஒன்று வந்திருக்கிறது. அரவிந்த் ஷர்மா இந்த அழைப்பை ஏற்ற சில நொடிகளில், ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோ வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து, அவருக்கு வாட்ஸ்அப்பில் மற்றொரு வீடியோ கால் வந்திருக்கிறது.
அதில், போலீஸ் சீருடையில் ஒருவர், சற்று முன்பு ஃபேஸ்புக் வீடியோ காலில் அரவிந்த் ஷர்மா தெரியாமல் பார்த்த அந்த ஆபாச வீடியோவை அனுப்பி, `உடனே நான் தெரிவிக்கும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பு. இல்லையென்றால், அந்த வீடியோவை உன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். இதனால், அச்சமடைந்த அரவிந்த் ஷர்மா, அந்த நபர் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு உடனடியாக ரூ.5,000 அனுப்பியிருக்கிறார். பிறகு, அவ்வப்போது அந்த நபர் பணம் கேட்கும்போதெல்லாம், சிறுக சிறுக பணம் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார் அரவிந்த் ஷர்மா. இவ்வாறாக இதுவரை ரூ.74,000 வரை அரவிந்த் ஷர்மா அனுப்பியிருக்கிறார். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அரவிந்த் ஷர்மாவிடம், அவரின் உறவினர்கள் கடந்த வாரம் பேசியபோது, தான் சிக்கிக்கொண்டிருப்பதை அவர் தெரிவித்தார்.
பின்னர், வீடியோவில் வந்த முகத்தை, கூகுளில் தேடியபோது, அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஓய்வு பெற்ற முன்னாள் ADG பிரேம் பிரகாஷ் என்பது தெரியவருகிறது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என சந்தேகித்த அரவிந்த் ஷர்மாவின் மகள் மோனிகா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போதுதான், போலீஸ் அதிகாரி பேசுவது போல டீப்ஃபேக் AI-Deepfake வீடியோவை மோசடி கும்பல் தயாரித்து, அவரிடம் பணம் பறித்திருக்கின்றனர் என்று தெரியவந்தது. இதுகுறித்து பேசிய காவல் உதவி ஆணையர் அபிஷேக் ஸ்ரீவஸ்தவா ,“ இதில், சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அந்த AI-Deepfake வீடியோவில் போலீஸ் அதிகாரி பணம் கேட்டு மிரட்டும்போது, அதில் வரும் குரலும், உதட்டசைவுகளும் பொருந்தவில்லை. இதனைக் கூர்ந்து கவனித்திருந்தாலே அது ஒரு போலியான வீடியோ எனக் கண்டறிந்திருக்கலாம். ஆனால், பயத்தில் கவனிக்காமல் போயிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், கூடுதல் காவல் துணை ஆணையர் (Crime & Ciber) சச்சிதானந்த், “AI-Deepfake தொழில்நுட்பத்தில் போலீஸாரின் பெயரையே பயன்படுத்தி நடைபெற்ற இந்த மோசடி வழக்குதான், காசியாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட முதல் AI-Deepfake மோசடி வழக்கு. இதை விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். பின்னர், அந்த வீடியோவில் வரும் முகத்துக்குச் சொந்தக்காரரான, 1993-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி பிரேம் பிரகாஷ், “இந்த AI-Deepfake வீடியோ குறித்துக் கடந்த புதன்கிழமைதான் அறிந்தேன். சில மோசடி நபர்கள் மக்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக எனது பெயரில் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோல மோசடி நபர்களால் பாதிக்கப்படுபவர்கள், உடனடியாக அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ, தேசிய சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் எண்ணிலோ (1930) புகாரளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நவம்பர் மாதத் தொடக்கத்தில் G20 நாடுகளின் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் “AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, உலகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.