கொல்கத்தா: மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியை பறித்தது பாஜகவின் பழிவாங்கும் அரசியல் என்றும், இதன் மூலம் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவை உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம் பெற்றுக்கொண்டு தொழிலதிபர் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில், நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இன்று (வெள்ளிக்கிழமை) பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ”பாஜகவின் அணுகுமுறையைப் பார்த்து இன்று நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. தனது நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மஹுவா மொய்த்ராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முழுமையான அநீதி அளிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை காரணமாக மஹுவா மொய்த்ரா பாதிக்கப்பட்டுள்ளார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நெறிமுறைக்குழுவின் 495 பக்க அறிக்கையை அரை மணி நேரத்தில் எவ்வாறு படிக்க முடியும்? மக்களவை சபாநாயகர் எப்படி இந்த முடிவை எடுத்தார்? மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக கட்சி இருக்கிறது. இந்த விவகாரத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஒன்றாக இருந்து போராடியதற்காக பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில், இண்டியா கூட்டணியுடன் இணைந்து எங்கள் கட்சி போராடும். ஜனநாயகத்துக்கு இது துரதிருஷ்டவசமானது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இது. அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்திருக்கிறார்கள். இந்தப் போரில் மஹுவா மொய்த்ரா வெற்றி பெறுவார். மக்கள் நீதியை அளிப்பார்கள். வரக்கூடிய தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்” என தெரிவித்தார்.
பின்னணி என்ன? – மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. நெறிமுறைக் குழு விசாரணையின்போது மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரீகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.