சென்னை: அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பதிவானது. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்டங்களில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்தே மழை பொழிவு எங்கு இருக்கும் என்பது தெரியவரும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக அண்மையில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் கனமழை பதிவானது. மழை வெள்ளத்தால் சென்னையின் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. மீட்பு பணிகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது.