நியூயார்க், ‘யுனெஸ்கோ’வின் கலாசார பட்டியலில், குஜராத்தின் பாரம்பரிய, ‘கர்பா’ நடனம் சேர்க்கப்பட்டதை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய வம்சாவளியினர் கர்பா நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
நம் நாட்டின் குஜராத்தில், நவராத்திரி பண்டிகையின் போது, பொதுமக்கள் கர்பா நடனமாடுவர். மேலும், சில வட மாநிலங்களிலும் இந்த நடனம் பிரபலம்.
சமீபத்தில், தென் அமெரிக்க நாடான போட்ஸ்வானாவில், யுனெஸ்கோவின் கலாசார பாதுகாப்பு கூட்டம் நடந்தது.
அப்போது, குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடனத்தை, கலாசார பட்டியலில் சேர்ப்பது என, முடிவு செய்யப்பட்டது.
இதை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர், நேற்று முன்தினம் மாலை கர்பா நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய கர்பா ஆடைகளை அணிந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் நடனமாடியது, அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நியூயார்க்கிற்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணியர் கர்பா நடனத்தை பார்த்து ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்தனர். மேலும் சிலர், கர்பா நடனத்தை ஆட முயற்சி செய்தனர்.
இந்திய வம்சாவளியினர் கூறுகையில், ‘இது, கர்பா நடனத்தின் கொண்டாட்டங்கள் அல்ல. இந்தியாவின் துடிப்பான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் கொண்டாட்டம்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement