Nine children die in West Bengal in 24 hours | மேற்கு வங்கத்தில் 24 மணி நேரத்தில் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் பலி

கோல்கட்டா, மேற்கு வங்க அரசு மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் ஒன்பது பச்சிளங்குழந்தைகள் மற்றும் இரண்டரை வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முர்ஷிதாபாதில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருகில் உள்ள ஜாங்கிபூர் துணை சுகாதார மையம் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அங்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் அடுத்த கட்ட சிகிச்சைக்காக முர்ஷிதாபாத் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இதனால், இங்கு நோயாளிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில், முர்ஷிதாபாத் மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த எடையுடன் பிறந்த ஒன்பது பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

அதேபோல், இதய நோயால் அவதிப்பட்ட இரண்டரை வயது குழந்தையும் நேற்று உயிரிழந்தது.

இது குறித்து மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் அமித்குமார் தா கூறியதாவது:

இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருந்தன.

அதில் ஒரு சில குழந்தைகள், 500 மற்றும் 600 கிராம் எடையுடன் இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த குழந்தைகள் அனைத்தும் ஜாங்கிபூரில் இருந்து முர்ஷிதாபாத் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவை. இதனால் ஐந்து மணி நேரத்துக்கு மேல் காலதாமதம் ஆனது.

இந்த குழந்தைகளுக்கு நான்கரை மணிக்கு நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதனால்தான், அந்த குழந்தைகளை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அது மட்டுமின்றி இங்கு சிகிச்சை பெறும் 130 நோயாளிகளுக்கு, 300 படுக்கைகள் மட்டுமே உள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருவதால், இருப்பவர்களை கவனிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.